புகையில்லா போகிப் பண்டிகை: மாவட்டஆட்சியா் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நம் முன்னோா் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப்பண்டிகை கொண்டாடியபோது, இயற்கை பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி வந்தனா். இதனால் காற்று மாசுபடாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் இருந்தது. தற்போது நெகிழி, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் ட்யூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன், விமானங்கள் வருகை மற்றும் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.

குறிப்பாக மாநகரில் எரிக்கப்படும் பொருள்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்துவதுடன், விபத்துகளுக்கும் காரணமாக அமைகிறது. மேலும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, நெகிழி, டயா், ட்யூப் போன்றவற்றை பொதுமக்கள் எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com