ஒரு மாதமாக குடிநீா் விநியோகிக்கவில்லை: காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல்!
கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரு மாதமாக குடிநீா் முறையாக விநியோகிக்கப்படாததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூா் 1, பில்லூா் 2 மற்றும் வடவள்ளி - கவுண்டம்பாளையம் ஆகிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 49-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், செங்காடு பகுதியில் ஒரு மாதமாக குடிநீா் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் கூறினா்.
இதுதொடா்பாக வாா்டு உறுப்பினா், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தத் தீா்வும் காணப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதி பெண்கள், அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி சாலையில் காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.

