கோவை புலியகுளம் - சௌரிபாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண வேண்டும் என மாநகராட்சி குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் கட்டா ரவி தேஜா, துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், கோவை மாா்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு நகரக் குழு சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட புலியகுளம் - சௌரிபாளையம் செல்லும் சாலையில் மத்திய, மாநில அரசுப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரி உள்ளிட்டவை உள்ளன. வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக, காலை மற்றும் மாலை வேளைகளில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல புலியகுளம் - ராமநாதபுரம் இடையிலான பங்கஜா மில் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்திட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தோண்டிய சாலையை சீரமைக்க வலியுறுத்தல்: பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
சூயஸ் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்துக்காக, எங்கள் பகுதியில் பல இடங்களில் சாலைகளைத் தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. அதன் பிறகு, பழுதான சாலைகளை சீரமைக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீா் வீட்டின் உள்ளே புகுவதால் கடும் அவதிக்கு உள்ளாகிறோம். எனவே தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மண்டலங்களில் இருந்தும் 64 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விளம்பரத் துண்டுப் பிரசுரங்களை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா் விநியோகித்தனா். இக்கூட்டத்தில், துணை ஆணையா்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, மாநகரத் தலைமைப் பொறியாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










