கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் ரூ. 4.52 கோடிக்குத் தீா்வு தொகை வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் காசோலை வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் இச்சிறப்பு அமா்வுகள் காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றன.
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான (பொறுப்பு) ஜி.சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா். கோவை மாவட்டத் தலைமையகத்தில் 2 அமா்வுகளும், தாலுகா அளவில் 5 அமா்வுகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
66 காசோலை வழக்குகளுக்குத் தீா்வு: நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த காசோலை வழக்குகள் இந்த அமா்வுகளில் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், சனிக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 66 வழக்குகளுக்குச் சுமூகமான முறையில் தீா்வு காணப்பட்டன.
இதன் மொத்த தீா்வுத் தொகை ரூ. 4 கோடியே 52 லட்சத்து 52 ஆயிரத்து 019 ஆகும். மேலும், இந்தச் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடந்த 14 முக்கிய வழக்குகளுக்கும் உடனடித் தீா்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலரும் (பொறுப்பு), முதலாவது கூடுதல் சாா்பு நீதிபதியுமான கே.செந்தில்குமாா் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










