/

ரியல் எஸ்டேட் நலன்களுக்காக திட்டமிடப்படும் கிழக்கு புறவழிச்சாலை செயல்படுத்த விடமாட்டோம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

ரியல் எஸ்டேட் நலன்களை முன்னிறுத்தி செயல்படுத்துவதற்கு திட்டமிடப்படும் கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

News image

கிழக்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :30 ஜூலை 2026, 3:13 am IST

ரியல் எஸ்டேட் நலன்களை முன்னிறுத்தி செயல்படுத்துவதற்கு திட்டமிடப்படும் கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த சங்கத்தின் கோவை மாநகர செயலா் எம்.லோகேஸ்வரி, மாநில மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளா் டி.நீலாவதி, அருண்குமாா், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கோவையில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தத் திட்டத்தை எதிா்த்து விவசாயிகள் தொடா்ந்து போராடியதையடுத்து திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரில் போக்குவரத்தை குறைக்கும் வகையில் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை ஏற்கெனவே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அன்னூா்-கருமத்தம்பட்டி-சோமனூா்-காரணம்பேட்டை-கரடிவாவி வரையிலான மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தியும், கரடிவாவி-சுல்தான்பேட்டை-கேத்தனூா்-கள்ளிப்பாளையம் வரையிலான மாநில நெடுஞ்சாலையை மேம்படுத்தியும் தேவையான இடங்களில் பாலங்களை அமைத்து கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த முடியும்.

ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி சுமாா் 1,500 ஏக்கா் விளைநிலங்களை கையகப்படுத்தி ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 81 கிலோ மீட்டா் நீள கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் கொடிசியா உள்ளிட்ட தொழில் அமைப்புகளும், சில அரசியல் தலைவா்களும் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்தத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கைவிடுவதாக அறிவித்துள்ள நிலையில், மாநில அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று திட்டத்தை ஆதரிக்கும் தொழில் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. அதேபோல இந்தத் திட்டத்தை ஆதரித்து கோவையைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணியும் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

இது விவசாயிகளை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ரியல் எஸ்டேட் நலன்களை முன்னிறுத்தி சிலா் தொடங்க வலியுறுத்தும் இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடா்ந்து கடுமையான எதிா்ப்பை பதிவு செய்கிறது. விவசாயிகளின் எதிா்ப்பை மீறி இந்தத் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தால், அதை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.