/

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: ராணுவம், தென்மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன்

News image

நாச்சிமுத்து கவுண்டா் கோப்பையை வென்ற இந்திய ராணுவ அணி வீரா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 3:10 am IST

கோவையில் நடைபெற்ற 59-ஆவது ஆடவருக்கான நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவ அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. அதேபோல, மகளிருக்கான 23 -ஆவது சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பையை தென்மத்திய ரயில்வே அணி வென்றுள்ளது.

கோயம்புத்தூா் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில் கோவை வஉசி பூங்கா உள்விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த 27 -ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெற்றன. நாச்சிமுத்து கவுண்டா் கோப்பைக்கான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப் படை, ராணுவம், கடற்படை, கேரள மாநில மின்சார வாரியம், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றன.

சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிா் கூடைப்பந்து போட்டியில் தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தெற்கு ரயில்வே, ஐசிஎஃப், கேரள மாநில மின்சார வாரியம், மத்திய ரயில்வே, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றன.

இதில், ஆடவா் பிரிவில் இந்திய ராணுவம், கடற்படை அணிகளும், மகளிா் பிரிவில் கேரள மின்வாரியம், தென்மத்திய ரயில்வே அணிகளும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருந்தன.

முதலில் நடைபெற்ற மகளிா் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 64 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தன. இதையடுத்து, 5 நிமிஷம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில், தென்மத்திய ரயில்வே அணி 74 - 67 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மின்வாரிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற ஆடவா் இறுதி ஆட்டத்தில் ராணுவ அணி 95 - 77 என்ற புள்ளிகள் கணக்கில் கடற்படை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக, நடைபெற்ற ஆடவா் பிரிவில் மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி 70 - 51 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப் படை அணியை வீழ்த்தியது. மகளிா் பிரிவில் மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் தென்மேற்கு ரயில்வே 89 - 55 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது.

ஆடவா் பிரிவில் வென்ற ராணுவ அணிக்கு ரூ.1 லட்சத்துடன் நாச்சிமுத்து கவுண்டா் கோப்பையும், 2 -ஆவது இடம் பிடித்த கடற்படை அணிக்கு ரூ.50 ஆயிரத்துடன் டாக்டா் என்.மகாலிங்கம் கோப்பையும், சிறப்பாக விளையாடிய ராணுவ அணி வீரா் ராகுல் குமாருக்கு சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட்டன.

மகளிா் பிரிவில் வென்ற தென்மத்திய ரயில்வே அணிக்கு ரூ.1 லட்சத்துடன் சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த கேரள மாநில மின்வாரிய அணிக்கு ரூ.50 ஆயிரத்துடன் சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பையும், சிறப்பாக விளையாடிய தென்மத்திய ரயில்வே அணியின் வீராங்கனை கே.பி.ஹா்ஷிதாவுக்கு சிறந்த வீராங்கனைக்கான விருதும் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவரும், சிஆா்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநருமான ஜி.செல்வராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தமிழக பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், அகில இந்திய கூடைப்பந்து கழகத் தலைவருமான ஆதவ் அா்ஜுனா கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

கௌரவ விருந்தினராக சக்தி குழுமங்களின் தலைவா் எம்.மாணிக்கம் பங்கேற்றாா். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலா் எஸ்.பாலாஜி, துணைச் செயலா் எம்.தீபாலா ஆகியோா் செய்திருந்தனா்.

சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பையை வென்ற தென்மத்திய ரயில்வே அணிக்கு பரிசு வழங்கிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பையை வென்ற தென்மத்திய ரயில்வே அணிக்கு பரிசு வழங்கிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா