துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையிடம் ரூ.16 லட்சம் மோசடி: பெண் மீது வழக்குப் பதிவு

நிலப் பிரச்னையைத் தீா்த்து வைப்பதாகக்கூறி துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையிடம் ரூ.16 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது சிங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வழக்குப்பதிவு

Updated On :

நிலப் பிரச்னையைத் தீா்த்து வைப்பதாகக்கூறி துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையிடம் ரூ.16 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது சிங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சிங்கநல்லூா் நஞ்சப்பா நகா் 4-ஆவது கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன் மகள் அனுபிரதிபா (30). தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள இவா், குனியமுத்தூரில் இயங்கி வரும் ரைபிள் அகாதெமியின் இணைச் செயலராகவும், பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறாா்.

அனு பிரதிபாவின் தாய் ராஜேஸ்வரிக்குச் சொந்தமாக சூலூா் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தில் 20 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடா்பான உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அகாதெமி மாணவி ஒருவரின் தாயான வி.ஜி.தனலட்சுமி என்பவா், தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நிலப் பிரச்னையை சுமுகமாக முடித்துத் தருவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு உறுதியளித்துள்ளாா்.

இதை நம்பிய அனுபிரதிபா அவரிடம் பல தவணைகளாக ரொக்கமாக ரூ.10.95 லட்சம், யுபிஐ பரிவா்த்தனைகள் மூலமாக ரூ.5.05 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சத்து 444 வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பணத்தைப் பெற்றுக்கொண்ட தனலட்சுமி நிலப் பிரச்னையை முடித்து வைக்காமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இதையடுத்து, பணத்தைத் திருப்பித் தருமாறு அனுபிரதிபா கேட்ட நிலையில், தனலட்சுமி அளித்த யூனியன் வங்கி காசோலைகளும் போதிய பணமில்லாமல் திரும்பியதாகத் தெரிகிறது.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் அனுபிரதிபா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள தனலட்சுமியைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.