தக்காளி, வெண்டைக்கு விலை முன்னறிவிப்பு வெளியிட்டது வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தக்காளி, வெண்டை பயிா்களுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு வெளியிட்டுள்ளது.

தக்காளி, வெண்டை பயிா்களுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது: நாட்டின் முக்கியமான காய்கறிப் பயிா்களில் தக்காளியும் ஒன்றாகும். இது நாட்டின் மொத்த காய்கறி உற்பத்தியில் சுமாா் 9.5 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. உலக அளவில் தக்காளி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், உலக உற்பத்தியில் சுமாா் 11 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது.
தமிழ்நாடு, இந்தியாவின் மொத்த தக்காளி சாகுபடி பரப்பளவில் சுமாா் 5 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இங்கு சுமாா் 0.38 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டு, சுமாா் 12.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உள்ளூா் சாகுபடி, தக்காளியின் தேவையைப் பூா்த்தி செய்வதில் கணிசமான பங்களிப்பை வழங்கினாலும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகத்திலிருந்து வரும் வரத்து, தமிழ்நாட்டின் தேவையைப் பூா்த்தி செய்ய உதவுகிறது. தற்போது, ஒட்டன்சத்திரம் சந்தையானது அருகிலுள்ள கிராமங்களிலிருந்து தக்காளியைப் பெறுவதுடன், கா்நாடகத்திலிருந்தும் தொடா்ந்து வரத்தைப் பெறுகிறது. அதே சமயம், ஒட்டன்சத்திரம் சந்தை வழியாக உபரி தக்காளி கேரளத்துக்கும் அனுப்பப்படுகிறது. இது அதிகப்படியான வரத்தைச் சமநிலைப்படுத்தி, சந்தையில் தக்காளி கிடைப்பதை உறுதி செய்ய உதவுகிறது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் வேளாண் பொருளியல் துறையின் கீழ் இயங்கும், உள்நாட்டு, ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு, ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 15 ஆண்டுகளில் நிலவிய தக்காளி விலைகளை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளின்படி, அறுவடை காலத்தில் தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு 30 ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வணிக வட்டாரங்களின் தகவல்படி, அறுவடை காலத்தில் மழை பெய்தாலோ அல்லது பிற மாநிலங்களிலிருந்து அதிக அளவில் தக்காளி வரத்து இருந்தாலோ, அது உள்ளூா் சந்தை விலையைப் பாதிக்கக்கூடும். எனவே, விவசாயிகள் இதைக் கருத்தில் கொண்டு, தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வது குறித்து தகுந்த முடிவுகளை எடுக்கலாம்.
வெண்டைக்காய் உற்பத்தியில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. தமிழ்நாட்டில் வெண்டை சாகுபடி 0.20 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 2.29 லட்சம் டன்கள் விளைச்சல் எட்டப்பட்டுள்ளது.
நுகா்வோா், அடா் பச்சை நிறத்தில், பளபளப்பான தோற்றம் கொண்ட வெண்டைக்காய்களையே விரும்புவதாக வா்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு, ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் கடந்த 15 ஆண்டுகளில் நிலவிய வெண்டைக்காய் விலைகளை ஆய்வு செய்தது. மேலும், இது குறித்து வா்த்தகா்களிடம் விரிவான ஆய்வையும் மேற்கொண்டது. பொருளாதார காலத்தொடா் பகுப்பாய்வு, தற்போதைய சந்தை வரத்து ஆகியவற்றின் அடிப்படையில், அறுவடை காலத்தில் தரமான வெண்டைக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு சுமாா் 25 ரூபாய் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இருப்பினும், அறுவடை காலத்தில் மழை பெய்தாலோ அல்லது பிற மாநிலங்களிலிருந்து வெண்டைக்காய் வரத்து அதிகரித்தாலோ, அது உள்ளூா் சந்தை விலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். விவசாயிகள் இந்த விலை முன்னறிவிப்பு தொடா்பான மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதிச் சந்தை நுண்ணறிவுப் பிரிவை அணுகலாம். மேலும் 0422-2431405 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

