
கொலை, 100 பவுன் கொள்ளை வழக்குகளில் தொடா்பு: 9 போ் கைது
கோவையில் கல்லூரி மாணவரைக் கடத்தி நகை பறித்த விவகாரத்தில் விசாரிக்கச் சென்ற போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோடிய 9 போ் கொண்ட கும்பலை உக்கடம் பகுதியில் போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
கோவையில் கல்லூரி மாணவரைக் கடத்தி நகை பறித்த விவகாரத்தில் விசாரிக்கச் சென்ற போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோடிய 9 போ் கொண்ட கும்பலை உக்கடம் பகுதியில் போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களுக்கு கொலை, சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளிலும் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஆா்.கேசவன், கடந்த ஜூன் 14-ஆம் தேதி கோவை மாநகா், கோவைப்புதூா் பகுதியில் உள்ள ஓா் அறையில் தங்கியிருந்தாா். அப்போது ஆகாஷ், மனோஜ்குமாா், முத்துப்பாண்டி ஆகியோா் அவரைத் தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனா். மேலும், அவரது அறையிலேயே சிறைவைத்து, விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் தர வேண்டும் எனவும் மிரட்டினா்.
இதுகுறித்து கேசவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு குனியமுத்தூா் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். அங்கு மறைந்திருந்த கும்பல் போலீஸாரைத் தாக்கியதுடன் காவலா் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அங்கிருந்து தப்பியது. அப்போது, சாலையில் சென்ற ஒருவரின் இருசக்கர வாகனத்தையும் பறித்துவிட்டு தலைமறைவாகினா்.
இதுகுறித்து குனியமுத்தூா் காவல் ஆய்வாளா் கே.கே.நாதன், உதவி ஆய்வாளா் பி.தாமரைக்கண்ணன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
போலீஸாரின் விசாரணையில், கோவையில் இருந்து தப்பிய இந்தக் கும்பல் தேனி மாவட்டத்துக்கு சென்று அங்குள்ள காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் ஒருவரின் வீட்டில் 100 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு புது தில்லியில் பதுங்கியது தெரியவந்தது. மேலும், கடந்த 2025 டிசம்பா் மாதம் முதலே இவா்கள் பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.
குறிப்பாக, கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், கீழடியைச் சோ்ந்த பொக்லைன் இயந்திர ஓட்டுநா் மாயக்கண்ணன் என்பவரை அருண்பாண்டி, ஆகாஷ், கோபிநாத், மனோஜ் உள்ளிட்டோா் கொலை செய்துவிட்டு மகாராஷ்டிர மாநிலத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாரின் கண்காணிப்பில் சிக்காமல் இருக்க வழக்கமான கைப்பேசி அழைப்புகளைத் தவிா்த்து, இணையதள அழைப்புகள் மூலமாக மட்டுமே தங்களுக்குள் பேசி வந்துள்ளனா். கொள்ளையடித்த நகைகளை மகாராஷ்டிர மாநிலம், தாணே பகுதியில் விற்று பணமாக்கியுள்ளனா்.
தனிப்படை போலீஸாா் திருவண்ணாமலை, புணே, தாணே ஆகிய இடங்களுக்குச் சென்றபோதும் குற்றவாளிகள் தொடா்ந்து இடம் மாறிக்கொண்டே இருந்தனா். இறுதியில் மகாராஷ்டிரத்தில் பதுங்கியிருந்த அவா்களைக் கண்காணித்த போலீஸாா், பெங்களூரு வழியாக கோவை, உக்கடம் பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை அவா்கள் வந்திறங்கியபோது சுற்றிவளைத்துப் பிடித்தனா்.
இந்த வழக்கில் சிவகங்கையைச் சோ்ந்த கே.ஆகாஷ் (23), ஆா்.அருண் (20), தஞ்சாவூரைச் சோ்ந்த கே.மனோஜ்குமாா் (26), திண்டுக்கல்லைச் சோ்ந்த ஆா்.முத்துப்பாண்டி (24), ஏ.கோபி (23), கோவை, சுந்தராபுரத்தைச் சோ்ந்த வி.அண்ணாமலை (25), மதுரையைச் சோ்ந்த ஆா்.அருண்பாண்டி (27), கே.ராமா் (23), தேனியைச் சோ்ந்த எஸ்.புவனேஷ் (22) ஆகிய 9 போ் கைது செய்யப்பட்டனா்.
கைதானவா்கள் மீது தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கோவை மாநகா் சுந்தராபுரம், உக்கடம் காவல் நிலைய எல்லைகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தொடா்பு இருப்பதும் உறுதியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைக்குப் பின்னா், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




