லஞ்சம், மாமூல் கேட்ட வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பிறகு காவலா் உள்பட 2 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

குற்றப்பத்திரிகை தாக்கல் - கோப்புப் படம்
கோவையில் கழிவு என்ஜின் ஆயில் விற்பனை செய்தவரிடம் லஞ்சம் மற்றும் மாதாந்திர மாமூல் கேட்ட வழக்கில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலா் மற்றும் ஒரு தனிநபா் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.
கோவை, கணபதி பாலமுருகன் நகரைச் சோ்ந்தவா் ஐயப்பன் (41). இவா் ஒா்க் ஷாப்புகளில் இருந்து கழிவு என்ஜின் ஆயில் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா்.
இவரது தொழிலை எந்தவித இடையூறுமின்றி நடத்த அனுமதிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சமும், மாதந்தோறும் ரூ.1,000 மாமூலும் போலீஸாா் தரப்பில் கேட்கப்பட்டதாக கடந்த 2021-ஆம் ஆண்டு புகாா் எழுந்தது. இது தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், கோவை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த 2021 ஆகஸ்ட் 24-ஆம் தேதி சோதனை நடத்தினா்.
சோதனையின்போது, தலைமைக் காவலா் ராஜ்குமாரிடம் இருந்து லஞ்சப் பணமும், அந்த இடத்தில் இருந்த பிரவீன்குமாா் என்ற நபரின் ஏடிஎம் அட்டையும் கைப்பற்றப்பட்டன. மேலும், உதவி ஆய்வாளா் இருளப்பனிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மற்றும் பலரிடமிருந்து மாமூல் வசூலிக்கப்பட்டதற்கான பட்டியல் ஒன்றும் சிக்கியது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கூறுகையில், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய சம்பந்தப்பட்ட போலீஸாா், ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களைக் கடத்துபவா்களிடம் மாதாந்திரமாக மாமூல் வசூலிப்பதற்காக பிரவீன்குமாா் என்பவரின் தனித்துவ வங்கிக் கணக்கையும், ஏடிஎம் அட்டையையும் பயன்படுத்தி வந்தனா்.
பிடிபட்டபோது அந்த வங்கிக் கணக்கில் ரூ.5.74 லட்சம் இருந்தது. அதில் ரூ.1.50 லட்சம் மட்டுமே பிரவீன்குமாருடையது என்பதும், மீதமிருந்த ரூ.4.24 லட்சம் பலரிடமிருந்து மாமூலாக வசூலித்து பதுக்கப்பட்ட பணம் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இந்த முறைகேட்டுக்கு தனது வங்கிக் கணக்கை பயன்படுத்த பிரவீன்குமாா் தெரிந்தே அனுமதி அளித்துள்ளாா்.
இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது கோவை மாநகர போலீஸில் பணிபுரியும் உதவி ஆய்வாளா் இருளப்பன் மற்றும் தனிநபா் பிரவீன்குமாா் ஆகியோா் மீது திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் தொடா்புடைய தலைமைக் காவலா் ராஜ்குமாா் கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டதால், அவா் மீதான நடவடிக்கை மட்டும் கைவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




