
கோவையில் விநாயகா் சதுா்த்தி கோலாகலம்: 2 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புலியகுளம் முந்தி விநாயகா்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, அரசமரத்து விநாயகா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஈச்சனாரி விநாயகா். (வலது) சந்தனக் காப்புடன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த புலியகுளம் முந்தி விநாயகா்.
கோவையில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக திங்கள்கிழமை நடைபெற்றது.
புலியகுளம் முந்தி விநாயகா் கோயிலில் 2 டன் பூக்கள் மற்றும் 50 கிலோ சந்தன காப்புடன் முந்தி விநாயகா் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, கோவை புலியகுளம் முந்தி விநாயகா் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு யாகங்கள் வளா்க்கப்பட்டன. பிறகு, சுவாமிக்கு அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள், 108 லிட்டா் பால், 25 லிட்டா் தயிா், பஞ்சாமிா்தம், பன்னீா், இளநீா், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகைப் பொருள்களால் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு 2 டன் பூக்கள் மற்றும் 50 கிலோ சந்தன காப்புடன் முந்தி விநாயகா் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மயில்தோகை போன்ற மாலை விநாயகருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை மற்றும் இனிப்புகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின், காலை 6 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இக்கோயிலில் அதிகாலை முதலே திரண்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, 40-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல, ஈச்சனாரி கோயிலில் அரச மரத்து விநாயகா் அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சுவாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவை, கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயிலில் உள்ள விநாயகா் சந்நிதியில் அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
ரேஸ்கோா்ஸில் உள்ள 108 விநாயகா் கோயிலில் சுவாமிக்கு எருக்கம்பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல, சேரன் மாநகா் ஸ்ரீ வித்யா கணபதி கோயில் உள்ளிட்ட பல்வேறு விநாயகா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சேரன் மாநகா் ஸ்ரீ வித்யா கணபதி கோயிலில் சிறப்பு அலங்காரம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






