நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறுமி கொலை: சித்திக்கு ஆயுள் தண்டனை

சொத்து ஆசையால் சிறுமியை கொலை செய்த வழக்கில், சிறுமியின் சித்திக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2015, 4:33 am IST

சொத்து ஆசையால் சிறுமியை கொலை செய்த வழக்கில், சிறுமியின் சித்திக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காமராஜ்புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இவர்களுக்கு பவித்ரா (10) என்ற மகளும், அரிகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில், மனைவி இறந்ததையடுத்து, பழனிசாமி, சித்ராதேவி (25) என்ற பெண்ணை 2-ஆம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கணவரின் சொத்துகள் அனைத்தும் முதல் மனைவியின் குழந்தைகளுக்கே போய் விடும் என சித்ராதேவி கருதியுள்ளார். இதனால், கணவர்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முதல் மனைவியின் குழந்தைகளைக் கொன்று விட்டால் சொத்துகள் அனைத்தும் தனது குழந்தைக்கு கிடைக்கும் என சித்ராதேவி எண்ணினார்.

இதையடுத்து, முதல் மனைவியின் குழந்தைகளைக் கொலை செய்ய அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 13.10.2013-இல் முதல் மனைவியின் மகள் பவித்ரா, மகன் அரிகிருஷ்ணன் ஆகியோரை சித்ராதேவி அப்பகுதியில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்.

இதில், பவித்ரா நீரில் மூழ்கி இறந்தார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அரிகிருஷ்ணனை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், முக்கிய சாட்சியாக சிறுவன் அரிகிருஷ்ணன் வாக்குமூலம் கொடுத்தார். அதில், தனது சித்தி சித்ராதேவி தான் தங்களை கிணற்றில் தள்ளிவிட்டார் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சித்ராதேவியை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கின் இறுதி விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, சிறுமி பவித்ராவை கொன்ற குற்றத்துக்காக சித்ராதேவிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், சிறுவனைக் கொல்ல முயற்சித்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகை ரூ. 60,000-ஐ அரிகிருஷ்ணனுக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் சுமதி ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.