டெங்கு கொசு பரவுவதைத் தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென பள்ளிக் கல்விச் செயலரும், ஈரோடு மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு கண்காணிப்பு அதிகாரியுமான த.உதயசந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு, அனைத்து துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரையில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை சுகாதாரத் துறை மட்டும் மேற்கொண்டால் போதாது.
பள்ளிக் கல்வித் துறை பள்ளி மாணவ, மாணவிகளிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் எவரேனும் 2 நாள்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் அவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி அவர்களது பெற்றோர்களிடம் தகவல் கேட்டு பெறவேண்டும்.
வருவாய்த் துறைப் பணியாளர்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் யாராவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா அது எவ்வகையான காய்ச்சல் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதி மக்களைக் கொண்டு சுகாதாரக் குழு அமைத்து தூய்மையைக் கண்காணிக்க வேண்டும்.
ஆகவே, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு டெங்குவை ஒழிக்க பாடுபட வேண்டும். மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்குவதோடு பப்பாளி இலைச்சாறினையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ரத்த தட்டணுக்களை உற்பத்தியை அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு உதவுகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையொட்டி, மாவட்டத்தில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக, 45 விநாடிகளில் ரத்த தட்டணுக்கள் அளவைக் கண்டறியும் 23 இயந்திரங்களை ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளுக்கு உதயசந்திரன் வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ந.சீனிவாசன், ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான், ஆவின் பொது மேலாளர் வெ.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.