பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் இயன்முறை (பிசியோதெரபிஸ்ட்) மருத்துவர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு, காளைமாட்டுச் சிலை அருகே தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் (பிசியோதெரபிஸ்ட்) பெருமன்றம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான உண்ணா நிலை போராட்டத்துக்கு, பெருமன்றத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
போராட்டத்தில், தமிழக சுகாதாரத் துறை அனைத்து மருத்துவப் பிரிவினரையும் சரிசமமாக பாவிக்க வேண்டும். பிசியோதெரபி மருத்துவத் துறை மீது அலோபதி மருத்துவர்கள் உள்பட மாற்று மருத்துவத் துறையினரின் தலையீடு அகற்றப்பட வேண்டும்.
மருந்து, மாத்திரைகளை பரிந்துரை செய்யக் கூடிய அலோபதி மருத்துவர்கள், மாநில சுகாதாரத் துறையின் உயர் பதவியில் இருப்பதால், மருந்தில்லா மருத்துவத்தைப் பரிந்துரைக்கக் கூடிய இயன்முறை மருத்துவர்கள் மீது அக்கறை செலுத்தவில்லை. இதன் பின்னணியில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இவை அனைத்தையும் தமிழக அரசு கண்மூடி வேடிக்கை பார்ப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது.
பிசியோதெரபி துறையை ஒரு தனித் துறையாக அங்கீகரிக்க வேண்டும். சாலை விபத்துகள், தலைக் காயங்கள், தண்டுவடப் பிரச்னைகள், மூட்டு வலி போன்ற பிரச்னைகளால் வீட்டிலேயே நோயாளிகள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழலை மாற்றும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபிஸ்டு பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி பிசியோதெரபிஸ்ட் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும். மருத்துவமனை ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை அமல்படுத்துவதற்கு முன் அனைத்து மருத்துவப் பிரிவுகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் டேனியல் ராஜா சுந்தரம், மருத்துவர்கள் அசோக், ஆனந்தன், அய்யப்பன், சுதாகர், ரவிசங்கர், விஜயராஜ் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






