
ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் தூய்மை பாரதம் திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை செல்லிடப்பேசி வாயிலாக பின்வரும் செயலியில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு இத்திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் 2019 இல் முழு சுகாதாரத் தமிழகம் முன்னோடித் தமிழகம் என்ற இலக்குடன் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணைகளை வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு 2014-15 முதல் 2017-18 வரை 1.30 லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டி ஊக்கத் தொகை ரூ. 12 ஆயிரமம் வீதம் வழங்கப்பட்டு 30.12.2017 அன்று மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளும் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது. மேலும், 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் வீதம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 225 ஊராட்சிகளில் 1,961 தூய்மைக் காவலர்கள் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம், கிராமப் பகுதிகள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாததாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுவதன் மூலம் கிராமங்கள் சுகாதாரத்தில் மேம்பாடு அடைந்துள்ளன.
தற்போது, மத்திய அரசு ஈரோடு மாவட்டத்தின் கிராமப்புறங்களில் தூய்மை குறித்து ஆகஸ்ட் 1 முதல் 31வரை தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2018 என்று முனைப்பு இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்களின் கருத்துகளை இணையதளத்தில் பெறும் நோக்கில் SSG-2018 எனும் செல்லிடப்பேசி செயலி (SSG-2018 Mobile App) மத்திய அரசால் உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவிடலாம்.
இந்த எளிய செல்லிடப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் எளிமையான 4 கேள்விகளுக்கு மாவட்டத்தில் செல்லிடப்பேசி பயன்படுத்தும் அனைத்து தரப்பினரின் குடும்ப உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள், தொழிலாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் தமது கருத்துகளை SSG-2018 எனும் செல்லிடப்பேசி செயலியின் வாயிலாகப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





