
நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்களா? மருத்துவர்கள் எச்சரிக்கை!
அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஹைபோநெட்ரீமியா பிரச்னை பற்றி மருத்துவர்கள் விளக்கம்...

கோப்புப் படம் - ENS
- உண்ணிகிருஷ்ணன் எஸ்
34 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் திடீரென ஒருநாள் சாலையில் மயங்கி விழுந்தார். அவர் வசிக்கும் பகுதியில் அப்போது வெப்பம் அதிகமிருந்ததால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கலாம் என்று நினைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரது ரத்தப் பரிசோதனையில் வேறுவிதமாக முடிவுகள் வந்தன. நீர் நச்சுத்தன்மை என்று அழைக்கப்படும் கடுமையான ஹைபோநெட்ரீமியாவால் (hyponatremia) பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதாவது கோடையில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், அதிக திரவங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் தீவிரமாக கடைப்பிடித்துளார். அதாவது நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று தீர்மானித்து பின்பற்றி வந்துள்ளார்.
இதனால் அவரது ரத்தத்தில் உள்ள சோடியம் அளவு குறைந்து அவருக்கு ஹைபோநெட்ரீமியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான தலைவலி, தசைப்பிடிப்பு, திடீர் மயக்கம் ஏற்படலாம்.
கோடை காலங்களில் தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லதுதான், ஆனால் அதிக தண்ணீர் குடிப்பதும் நீரிழப்பைப் போலவே ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
உடலுக்கு நீர் தேவை... ஆனால்.. !
மனித உடலானது, நீர், எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், பொட்டாசியம், குளோரைடு ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு சமநிலையைக் கொண்டுள்ளது. வியர்வையின் அளவு அதிகரிக்கும்போது உடலானது நீரையும் அத்தியாவசிய தாதுக்களையும் இழக்கிறது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் தாதுக்கள் இல்லாத அதிக தண்ணீரைக் குடிப்பது செல்களுக்கு வெளியே இருக்கும் திரவத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.
சாதாரண சூழ்நிலைகளில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 முதல் 1,000 மி.லி.(ஒரு லிட்டர்) திரவத்தை வெளியேற்றும் திறன் கொண்ட சிறுநீரகங்கள், அதிக சுமையால் திணறி அதிகப்படியான நீரை திசுக்களுக்குள் செலுத்துகின்றன.
பெங்களூர் ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான டாக்டர் பிருந்தா இதுபற்றி விளக்கமளிக்கிறார்.
"மிகக் குறைந்த அளவு நீர் அருந்துவதும் மிக அதிக அளவு நீர் அருந்துவதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். போதுமான அளவு தண்ணீர் அருந்தாதது நீரிழப்பு, தலைவலி, தலைச்சுற்றல், மலச்சிக்கல், குறைந்த ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள் உருவாதல், சில சந்தர்ப்பங்களில் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம், அதேபோல அதிகப்படியான தண்ணீரை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அருந்துவது ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைத்து, ஹைப்போநெட்ரீமியாவுக்கு வழிவகுக்கிறது" என்றார்.
கொச்சி ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையின் டாக்டர் வினோத் சேவியர், "நீரேற்றம் என்பது வேதியியல் சமநிலையைப் பற்றியது. ஒருவர் அதிகமாக வியர்க்கும்போது, சோடியம் இல்லாத சுத்தமான நீரை குடிக்கும்போது உடலில் சமநிலையின்மையை உருவாக்குகிறது.
தண்ணீருக்குப் பதிலாக ஒரு சிட்டிகை உப்பு கலந்த மசாலா மோர் அல்லது இளநீர் போன்றவை சாப்பிடும்போது தாதுக்களுடன் நீரேற்றமும் கிடைக்கும். இவை ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவை சரியாக நிர்வகிக்கின்றன" என்றார்.
மேலும் மருத்துவர்கள் கூறுகையில், கோடையில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். உடலுக்குத் தேவையான தண்ணீர் விதிகளில் முதன்மையானது "8x8 விதி" ஆகும். தினமும் எட்டு 8-அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
"இந்த 8x8 விதி ஒரு நல்ல வழிகாட்டுதல்தான், ஆனால் அது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது" என்று பெங்களூர் ஆஸ்டர் ஆர்.வி. மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் அதிதி பிரசாத் ஆப்தே கூறுகிறார்.
மேலும் அவர், "வயது, உடல் அளவு, செயல்பாடு, காலநிலை, உணவுமுறை, பொதுவான உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொருத்து நீரேற்றத் தேவைகள் மாறுபடுகின்றன. மேலும் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்பது உண்மையல்ல. பால், சூப், மூலிகை தேநீர், பழங்கள், காய்கறிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.
பொதுவாக தண்ணீர் குடிக்கும் அளவை நிர்ணயிப்பது அனைவருக்கும் பொருந்தாது. அவரவர் உடல் செயல்பாடு, காலநிலை, வளர்சிதை மாற்றம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும் என்றும் உடலுக்கு அதிக நீர் அல்லது திரவம் தேவைப்படும்போது இயற்கையாவாகவே தாகத்தின் மூலம் உடல் எச்சரிக்கிறது, எனவே, தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடிப்பதும் சிறுநீர், லேசான மஞ்சள் நிறத்தில் இருப்பதுமே போதுமானது, ஆரோக்கியமானது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தண்ணீர் அதிகமாக குடிக்கும்போது ரத்தத்தில் சோடியத்தின் செறிவு இயல்பான அளவிற்குக் கீழே குறையும்போது (ஒரு லிட்டருக்கு 135 மில்லிசமங்கள்) அது ரத்த நாளங்களிலிருந்து நீரை வெளியேற்றி, சுற்றியுள்ள திசு செல்களுக்குள் நேரடியாக அனுப்புகிறது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் சிறிய திசு வீக்கம், குறிப்பிட்ட இடத்தில் நீர் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
மனித மண்டையோட்டின் மூளை நீர் வீக்கம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம். ஏனெனில் மூளை செல்கள் அதிகப்படியான திரவத்தை உறிஞ்சி விரிவடையும்போது, மண்டை ஓட்டுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது. தலைச்சுற்றல், சோர்வு, லேசான மயக்கம், லேசான குமட்டல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் இருக்கலாம். இது நீரிழப்பு என்று கருதப்படுகிறது. வலிப்பு, குழப்பம், சுயநினைவு இழப்பு வரை கொண்டு செல்லும்.
ஏற்கெனவே இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பும், இறுக்கமான சிகிச்சை முறையும் தேவை.
கோடையை சமாளிக்க இயற்கையாக ஏற்படும் தாகத்தின் மீது கவனம் செலுத்துதல், சிறுநீரின் நிறத்தைக் கண்காணித்தல், கடினமான உடற்பயிற்சியின் போது எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களை அருந்துவதன் மூலமாக நீரிழப்பை சரியாக பராமரிக்க முடியும் என்று டாக்டர் ஆப்தே கூறினார்.
என்ன செய்ய வேண்டும்?
சிறுநீரகங்களால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டருக்கும் குறைவான திரவத்தையே வெளியேற்ற முடியும். இதனால் திடீரென அதிகப்படியான திரவத்தை உட்கொள்வது ஆபத்தானது.
கடும் வெப்பத்தில் வெளியே செல்வதற்கு முன் அதிக அளவு தண்ணீர் குடிப்பது, திரவத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக வெளியேற்றத்தை வேகப்படுத்துகிறது.
அதிக வியர்வை உடலில் உள்ள நீர், சோடியம் இரண்டையும் நீக்கிவிடுகிறது. வெறும், தாதுக்கள் இல்லாத தண்ணீரை மட்டும் கொண்டு ஈடுசெய்வது ரத்த வேதியியலை நீர்த்துப்போகச் செய்கிறது. எனவே எலக்ட்ரோலைட்டுகள் தேவை.
தினசரி திரவ உட்கொள்ளலில் 30% வரை பழங்கள், காய்கறிகள், சூப் போன்ற உணவுகளிலிருந்து இயற்கையாகவே கிடைக்கிறது.
மசாலா கலந்த மோர், தண்ணீருடன் பால் பொருள்கள், மோரில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கல் உப்பு சேர்த்து அருந்தலாம். உப்பு, உடலுக்குத் தேவையான சோடியத்தை வழங்குகிறது.
இதேபோல சீரகம் கலந்த நீர், தாதுக்களுடன் நீரேற்றத்தைத் தரும்.
இளநீர் இயற்கையாகவே பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தமிழில்: எம். முத்துமாரி
Summary
Drinking too much water is also dangerous: Doctors warning
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







