
பவானி நகராட்சி சார்பில், அதிநவீன இயந்திரங்களால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில், ரூ. 1 க்கு ஒரு லிட்டர், ரூ. 7 க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 வார்டுகளைக் கொண்ட பவானி நகராட்சிப் பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டு, சுத்திகரித்து, குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்பத்தின் அனைத்துப் பயன்பாடுகளுக்கும் நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் பல குடும்பத்தினர் குடிப்பதற்கு மட்டும் தனியார் கேன் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
மேலும், பலர் தங்கள் வீடுகளில் ஆர்ஓ பிளாண்ட் அமைத்து தண்ணீரை சுத்திகரித்து குடித்து வருகின்றனர். ஆற்றுத் தண்ணீரில் அதிக அளவில் கழிவுகள் கலந்து வருவதாக பரவலாக பொதுமக்கள் நம்புவதால், ஆர்ஓ மூலம் சுத்திகரிக்கப்படும் குடிநீரையே பெரும்பாலும் குடிப்பதற்குப் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், பவானி நகராட்சி நிர்வாகம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மானிய விலையில் வழங்கும் வகையில் முதல்கட்டமாக நகரின் 10 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, பவானி காமராஜர் நகர், குடிநீர் மேல்தேக்கத் தொட்டி வளாகத்தில் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஒரு மணி நேரத்துக்கு 1,000 லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யும் வகையில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, தானியங்கி கருவிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதற்காக, பொருத்தப்பட்ட இயந்திரத்தில் ரூ. 1 சில்லறை நாணயத்தைப் போட்டால் அருகில் உள்ள குழாயில் ஒரு லிட்டர் தண்ணீர் வெளியே வரும். அதேபோன்று, தானியங்கி சென்சார் முன்பு ஏற்கெனவே முன்பணம் செலுத்தி வாங்கப்பட்ட பயோமெட்ரிக் அட்டையைக் காட்டினால் 20 லிட்டர் தண்ணீர் குழாயில் வரும். இதனை, குடிநீர் கேன்களில் பிடித்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் இம்மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த பயோமெட்ரிக் அட்டையில் பணம் தீர்ந்துவிட்டவுடன், மீண்டும் ரூ. 200 முதல் ரூ. 1,000 வரையில் இ-சார்ஜ் செய்து கொள்ளலாம்.
தமிழக அரசு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மிகக்குறைந்த விலைக்கு வழங்கும் வகையிலான திட்டத்தை அறிமுகம் செய்ததன்பேரில், தமிழகத்தில் உள்ள 125 நகராட்சிகளிலும் தேவைக்கேற்ப செயல்படுத்தப்பட உள்ளது. பவானி நகராட்சியில் தற்போது ஒரு மையம் முழு அளவில் தயார் நிலையில் உள்ள நிலையில், முதல்கட்டமாக 10 வார்டுகளில் சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்பட உள்ளன. பின்னர், வார்டுகள்தோறும் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
திருப்பூர் மண்டல நகராட்சி அலுவலகங்களில் பவானி நகராட்சியில் மட்டுமே முதல் முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, விரைவில் அமலுக்கு வருகிறது. தனியார் கேன் தண்ணீர் 20 லிட்டர் ரூ. 30 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் 20 லிட்டர் குடிநீரை ரூ. 7 க்கு விற்பனை செய்வதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





