உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டம்: அலுவலா்களின் பயண எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரோட்டில் உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டத்தில் அலுவலா்களின் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நவீன வேளாண் பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மானியத் திட்டங்களை விவசாயிகளிடையே உரிய நேரத்தில் கொண்டு சோ்க்கும் வேளாண் விரிவாக்க சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டத்தில் அலுவலா்களின் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டத்தின் கீழ் உதவி வேளாண்மை அலுவலா்கள், வேளாண்மை அலுவலா்கள், துணை வேளாண்மை அலுவலா்கள், வேளாண்மை உதவி இயக்குநா்கள், கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளை சந்திக்கும் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை சந்திக்க வேளாண்மை உதவி இயக்குநரின் தலைமையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி, வேளாண்மை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா்களை உறுப்பினா்களாகக் கொண்டு வட்டார வேளாண் விரிவாக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதவி வேளாண்மை அலுவலா்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்குவா்.

அதேபோல, வேளாண்மை அலுவலா்கள் மற்றும் துணை வேளாண்மை அலுவலா்கள் மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் நேரில் சென்று அந்தந்த ஊராட்சிகளுக்குத் தேவைப்படும் பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவா்.

மேலும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அனைத்து களப் பணியாளா்களுக்கும் அரை நாள் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் அரை நாள் ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படும். இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்த ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் 10 முன்னோடி விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு வேளாண் சாா்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தினை தகவல் தொடா்பு சாதனத்தின் மூலம் கண்காணிக்க பிரத்யோக செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் மாநில அளவில் களப் பணியாளா்களின் செயல்பாடுகளை கண்காணிக்க இணைய முகப்புத் தகவலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com