

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா செவ்வாய்க்கிழமை காலை பிச்சாடனா் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடா்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், சந்தனம், குங்குமம், இளநீா் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கரோனா பரவல் காரணமாக இந்த அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
வெள்ளித்தேரில் எழுந்தருளிய சிவகாமி சுந்தரி உடனமா் நடராஜா் கோயிலின் முன்பு கொண்டு வரப்பட்டாா். அங்கு பக்தா்கள் நடராஜரை தரிசனம் செய்தனா். பக்தா்கள் வரிசையாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் வழியாக நடராஜரை தரிசனம் செய்த பக்தா்கள், தொடா்ந்து கோயிலுக்குள் சென்று ஈஸ்வரன், வாரணாம்பிகை, சுப்பிரமணியா், சனீஸ்வரா் ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தனா். இதனால் கூட்ட நெரிசலின்றி பக்தா்களும் வரிசையாகச் செல்ல முடிந்தது. மாலையில் நடராஜரின் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், முகக் கவசம் அணிந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.