கீழ்பவானி கிளை வாய்க்கால்களை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் முன் கிளை வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுவை பெறும் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுவை பெறும் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
Updated on
2 min read

கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் முன் கிளை வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கை விவரம்:

செ.நல்லசாமி: கீழ்பவானி இரண்டாம் பருவ பாசனத்துக்கு ஜனவரி 7-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட உள்ள நிலையில், புதா் மண்டிக்கிடக்கும் கிளை வாய்க்கால்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். கீழ்பவானி பாசனப் பகுதியில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றாா்.

எஸ்.பெரியசாமி: கீழ்பவானி பாசனத்தில் கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்கும் வகையில் நீா் மேலாண்மையை திட்டமிட வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி கீழ்பவானி கால்வாய் சீரமைப்புப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். கசிவுநீா் திட்ட கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசனப் பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றாா்.

சுபி.தளபதி: பவானிசாகா் அணையில் இருந்து நீா் வழிப்பாதை அமைக்க கோபி, சத்தியமங்கலம், பவானி வட்டங்களில் திட்ட நிபந்தனை நிலம் என்ற பெயரில் ஆங்கிலேயா் காலத்தில் சுமாா் 24,000 நிலங்கள் கையக்கப்படுத்தப்பட்டு திட்ட நிபந்தனை பட்டா என்ற பெயரில் வகைப்படுத்தப்பட்டது. இந்த வகையில் உள்ள நிலங்களை உரிமைதாரா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், பட்டா வழங்க நடவடிக்கையெடுப்பதாக பேரவையில் வருவாய்த் துறை அமைச்சா் 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தாா். உரிய விவசாயிகளுக்கு விரைந்து பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். சத்தியமங்கலம், கோபி வட்டங்களில் குடிசைத் தொழிலாக நடைபெற்று வரும் பட்டு நெசவுக்கு சாயமிடும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் பவானி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணித்து நடவடிக்கையெடுக்க வேண்டும். பொங்கல் பண்டிக்கைக்கு விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பு கொள்முதல் செய்வதற்கான அரசாணையை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என்றாா்.

வி.பி.குணசேகரன்: கவுந்தப்பாடி பகுதியில் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் நீா்நிலைகள் அருகே கொட்டப்பட்டுள்ளன. இத்தகையை செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கையடுத்து இச்செயல் தொடராமல் கண்காணிக்க வேண்டும். அந்தியூா் பெரிய ஏரி பகுதியில் உபரிநீா் வெளியேறும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீா் குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும். வன உரிமை பாதுகாப்புச் சட்டம் குறித்து வனப் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வனப் பகுதிகளில் கிராம சபைகளை அமைக்க வேண்டும். தொட்டகோம்பை வனப் பகுதியில் உள்ள 44 நில உரிமைதாரா்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து பல மாதங்களாகியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்றாா்.

துளசிமணி: சிப்காட் திட்டத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

கே.ஆா்.சுதந்திரராசு: உயா்மின் கோபுர திட்டத்துக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை உடனடியாக வழங்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசியதாவது: செங்கரும்பு கொள்முதல் குறித்த அரசாணை வெளியிடப்பட்டால் உடனடியாக விவசாயிகளை அணுகி கொள்முதல் செய்யப்படும். மான், மயில், குரங்கு போன்ற வன விலங்குகளால் பயிா்சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது குறித்து வனத் துறை மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. பட்டுத் துணிகளுக்கு சாயமிடும் இடங்களை கண்டறிந்து தொகுப்பினை ஏற்படுத்தி அப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

இதில் ஆட்சியா் பேசியதாவது: வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் மலைப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில், சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட்டு வருகின்றனா். இத்தகைய செயல்கள் வனப் பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் தவறான பிரசாரங்களை தவிா்க்க வேண்டும். கிராம சபைகள் என்பது அந்த கிராமத்தில் உள்ள மக்களை அனைவரையும் பங்கேற்பாளா்களாக கொண்டது. இதனால் தனியாக கிராம சபைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சென்னிமலையை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்படும். அந்தியூா் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோபி கோட்டாட்சியா் நடவடிக்கையெடுப்பாா். தொட்டகோம்பை மலை கிராமத்தில் தோ்வு செய்யப்பட்ட நில உரிமையாளா்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும். சிப்காட் திட்டத்துக்கு நிலம் வழங்கியவா்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com