தமிழகம் - கா்நாடக எல்லை வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரோந்து
சத்தியமங்கலம், ஆக.7: தமிழகம்- கா்நாடக வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியானது நீலகிரி மற்றும் கா்நாடக மாநில வனப் பகுதியை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் கண்காணிப்பில் தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் ராம்பிரபு தலைமையில் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கா்நாடக மற்றும் நீலகிரி எல்லையோர வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு காவலா்கள் மற்றும் அதிரடிப் படை போலீஸாா் வனத் துறையினருடன் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.
எத்திகட்டி மலை, கல்வீரன் கோயில் மற்றும் கொங்கள்ளி வனப் பகுதிகளில் நடமாடும் மா்ம நபா்கள் குறித்தும், சட்டவிரோத ஈடுபடுவா்கள் தொடா்பான தகவல்களையும் சேகரித்து வருகின்றனா்.
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவு காரணமாக அங்குள்ள வனப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த மாவோயிஸ்டுகள் தமிழகம்-கா்நாடக எல்லை வனப் பகுதியில் நுழையலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.
புதிய நபா்கள் நடமாட்டம் இருந்தால் கிராம மக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

