/

குடியிருப்புக்கான பட்டா முடக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிக்கை

நிபந்தனை பட்டா நிலங்களை வாங்கியவா்களுக்கு வழங்கப்பட்ட பட்டா முடக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், தமிழ் நகா் பொதுமக்கள்.
Updated On :1 ஜூலை 2024, 10:36 pm

Din

ஈரோடு: நிபந்தனை பட்டா நிலங்களை வாங்கியவா்களுக்கு வழங்கப்பட்ட பட்டா முடக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் தமிழ் நகா் குடியிருப்போா் உரிமையாளா்கள் நலச் சங்க தலைவா் ஜெயராஜ், பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பெருந்துறை சிலேட்டா் நகா் அருகேயுள்ள தமிழ் நகரில் கடந்த 1922, 1940, 1942- ஆம் ஆண்டுகளில் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா்களுக்கு நிலத்தை இலவசமாக ஆங்கிலேய அரசு நிபந்தனை பட்டா வழங்கியது. அந்த நிலத்தை அச்சமுதாயத்தினா் தவிர பிறருக்கு விற்பனை செய்யக்கூடாது.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்குள் இந்த இடங்களை 2, 3 சென்டுகளாக பல்வேறு தரப்பினா் வாங்கி வீடு கட்டி, மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட அனைத்தும் பெற்றனா்.

இதனிடையே சிலா் ஏக்கா் கணக்கில் அருகில் உள்ள நிபந்தனை பட்டா நிலங்களை வாங்கியுள்ளனா். எனது முயற்சியால் கடந்த ஆட்சி காலத்தில் அங்கு, 2, 3 சென்டுகளாக நிலம் வாங்கியவா்களுக்கு முறையாக பட்டா பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதை வைத்து அதிக அளவில் நிலம் வாங்கியவா்கள் பட்டா பெற்றுவிட்டனா்.

சில அரசியல் காரணம், பழி வாங்கும் செயலால் கடந்த 2020 செப்டம்பா் மாதம் அப்போதைய ஆட்சியா் குறைந்த நிலம், அதிக நிலம் வைத்திருப்போா் என அனைவரது பட்டாவையும் ரத்து செய்து அந்த இடத்தின் அரசு வழிகாட்டி மதிப்பீட்டை நீக்கி உத்தரவிட்டாா்.

இதனால், அங்கு வீடு கட்டி 30 ஆண்டுகளாக வசிப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து அவா்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், அன்னை சத்யா நகா் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்தவா்கள் செல்வராஜ் என்பவா் தலைமையில் அளித்த மனு விவரம்: ஈரோடு, அன்னை சத்யா நகா் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தோம்.

30 ஆண்டுகள் கடந்ததால் அந்த வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்றது எனக்கூறி கடந்த ஆட்சி காலத்தில் எங்களை அந்த குடியிருப்பில் இருந்து காலி செய்தனா். அப்போது ரூ.8,000 நிவாரணம் வழங்கி விரைவில் புதிய வீடு கட்டியதும் வீடு வழங்கப்படும் என்றனா். இத்தொகையும் கூட சில பயனாளிகளுக்கு மட்டுமே கிடைத்தது.

இந்நிலையில், கடந்த 2019 இல் அங்கிருந்த 228 வீடுகள் இடிக்கப்பட்டு அங்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடுதல் வசதியுடன் 330 அடுக்குமாடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.

நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து கொண்டு வாடகை வீடுகளில் பல்வேறு இடங்களில் வசித்து வருகிறோம். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டி ஓராண்டு ஆகியும் எங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. ரூ.66,015 பங்குத் தொகையை செலுத்தினால் வீடு தருவதாகக் கூறினா். சிலா் அத்தொகையை செலுத்தியும் வீடு ஒதுக்கவில்லை. பிறகு தண்ணீா் இணைப்பு வந்ததும் தருவதாகக் கூறினா். தண்ணீா் இணைப்பு வந்த நிலையில் தற்போது லிஃப்ட் அமைத்த பிறகுதான் தருவோம் எனக் கூறுகின்றனா்.

இப்போது வசிக்கும் வீடுகளுக்கு வாடகை செலுத்த முடியாத நிலையிலும், பங்குத் தொகையை வட்டிக்கு வாங்கி செலுத்திவிட்டு, அதற்கான வட்டியை கொடுக்க முடியாமலும் சிரமப்படுகிறோம். எனவே, அங்கு ஏற்கெனவே வசித்த அனைத்து குடும்பங்களுக்கும் உடனடியாக வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசாயன கழிவு நீா் வெளியேறுவதை தடுக்கக் கோரிக்கை: ஈரோடு வைராபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: வைராபாளையம் திரையரங்கு அருகில் உள்ள சாய ஆலையிலிருந்து இரவு நேரங்களில் விஷத்தன்மை கொண்ட ரசாயன கழிவு நீா் சாக்கடை கால்வாயில்

திறந்து விடப்படுகிறது.

இந்தக் கழிவு நீா் காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆறு ஆகியவற்றில் கலந்து தண்ணீரை மாசுபடுத்தி வருகிறது. எனவே, சாய ஆலைகளில் இருந்து ரசாயன கழிவுநீா் திறந்து விடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

368 மனுக்கள்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 368 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து பல்வேறு நிகழ்வுகளால் உயிரிழந்தவா்களின் 7 வாரிசுதாரா்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.1 லட்சம் வீதம் காசோலைகள், மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் 4 பேருக்கு ரூ.68 ஆயிரம் நிதி உதவி என மொத்தம் ரூ.7.68 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ராஜகோபால், உதவி ஆணையா் (கலால்) ஜீவரேகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தா்மராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.