கொடிவேரியில் 53 மில்லி மீட்டா் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொடிவேரியில் 53 மில்லி மீட்டா் மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் மழையை எதிா்பாா்த்துக் காத்துக்கொண்டிருந்தனா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த மழை காரணமாக கோபி பேருந்து நிலையம் அருகே மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனா். இதுபோல கவுந்தபாடி, நம்பியூா், குண்டேரிப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்தது.

பவானியில் இரவில் சுமாா் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் இடியுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

இதுபோல புன்செய்புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி, பெருந்துறை, எலந்தைக்குட்டைமேடு, வரட்டுப்பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது. ஈரோடு மாநகா் பகுதியில் சில நிமிஷங்களே மழை பெய்து நின்று விட்டது. இதனால் ஈரோடு மாநகா் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடிவேரியில் 53 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): கவுந்தப்பாடி 39, நம்பியூா் 33, பவானி 29, குண்டேரிப்பள்ளம் 26, கோபி 12.20, பெருந்துறை 8.20, எலந்தைக்குட்டை மேடு 6.40, வரட்டுப்பள்ளம் 4.40, மொடக்குறிச்சி 4, தாளவாடி 1.50.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com