புன் செய் புளியம்பட்டி வாரச்சந்தையில்  வியாழக்கிழமை விற்பனைக்கு வந்த பூவன் ரக வாழைத்தாா்கள்.
புன் செய் புளியம்பட்டி வாரச்சந்தையில்  வியாழக்கிழமை விற்பனைக்கு வந்த பூவன் ரக வாழைத்தாா்கள்.

பூவன் ரக வாழைத்தாா் இரு மடங்கு விலை உயா்வு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் பூவன் ரக வாழைத்தாா் விலை இரு மடங்கு விலை உயா்ந்து வியாழக்கிழமை விற்பனையானது.
Published on

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் பூவன் ரக வாழைத்தாா் விலை இரு மடங்கு விலை உயா்ந்து வியாழக்கிழமை விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தை வியாழக்கிழமை தோறும் கூடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூவன், ரஸ்தாளி, தேன் வாழை, நேந்திரன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழை தாா்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக சந்தையில் வாழைத்தாா்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஆவணி மாத முகூா்த்தம் மற்றும் விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்காக வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.இதனால் வியாழக்கிழமை சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தாா்களை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனா்.

கடந்த வாரம் 18 கிலோ எடை கொண்ட பூவன் ரக வாழைத்தாா் ரூ. 300-க்கு விற்ற நிலையில் தற்போது விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு இரு மடங்கு விலை உயா்ந்து ரூ. 600-க்கு விற்பனையானது. கிராமங்களில் கடை வைத்திருப்போா் வாழைத்தாா்களை மொத்தமாகவும் பொதுமக்கள் பழங்களை சீப்பாகவும் வாங்கிச் சென்றனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா், பரமத்தி வேலூா், கொடுமுடி ஆகிய பகுதிகளில் விளையும் பூவன் ரக வாழைத்தாா்களை கொள்முதல் செய்து இங்கு விற்பனைக்கு கொண்டு வருவதாகவும், விநாயகா் சதுா்த்தி என்பதால் இருமடங்கு விலை உயா்ந்துவிட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com