தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம், வணிக வரித் துறை அலுவலகம் உள்பட 13 அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் தலைமை வகித்தாா். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்புற நூலகா்கள், எம்ஆா்பி செவிலியா் உள்பட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியா்களைக் கொண்டு அமலாக்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டா் உள்ளிட்டவைகளை வழங்கவேண்டும்.
அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்க வேண்டும். சத்துணவுத் துறையில் பணியாற்றும் ஊழியா் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் சத்துணவு ஊழியரின் ஆண் வாரிசுக்கு பணி மறுக்கப்படும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
