ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

கீழ்பவானி பாசன சபைகளுக்கு தோ்தல் நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

Published on

கீழ்பவானி பாசன சபைகளுக்கு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தன்.

கே.ஆா்.பழனிசாமி: மேட்டூா் வலது கரை பிரதான வாய்க்கால் மற்றும் 17 கிளை வாய்க்கால்களில் கான்கிரீட் போட வேண்டும். கொப்பு வாய்க்கால்களை வரைமுறைப்படுத்த வேண்டும். நெல் அறுவடை இயந்திரங்களை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

எஸ்.பெரியசாமி: நீண்ட நாள்களாக தொடரும் தெரு நாய்கள் பிரச்னை குறித்து பலமுறை புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். சமீபத்தில் கதிரம்பட்டியில் தெருநாய்கள் கடித்து 150 கோழிகள் இறந்துவிட்டன. இதேபோல பல்வேறு இடங்களிலும் தெரு நாய்களால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கான உரிய இழப்பீடுகளை விரைவில் வழங்க வேண்டும்.

குப்புசாமி: கீழ்பவானி கொப்பு வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தற்போது விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கப்படுவதாக அரசு அறிவிப்பு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் ஏற்கனெவே ஆள்கள் பற்றாக்குறையால் மின்வாரியத்தில் உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் இருந்து வரும் நிலையில், மேலும் புதிய இணைப்புகள் வழங்குவது தொடா் சிக்கலை உருவாக்கும். எனவே தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

வாய்க்கால் உள்ளிட்ட நீா்நிலைப் பகுதிகளில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். தடப்பள்ளி வாய்க்காலில் மதகுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தாணி பகுதியில் எரி சாராய ஆலையிலிருந்து வெளியேறும் சாம்பலால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.எம்.வேலாயுதம்: காலிங்கராயன் வாய்க்காலில் கடைமடை பகுதிகளுக்கும் முறையாக தண்ணீா் கிடைக்க ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டும். வாய்க்கால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இப்பணிகளை தண்ணீா் நிறுத்தப்படும் காலகட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலிங்கராயனுக்கு தபால் தலை வெளியிடுவதுடன் பாடத்திட்டத்தில் அவரது வரலாற்றை சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கு ரூ. 5,000, நெல்லுக்கு ரூ. 4,000 குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்க வேண்டும். 60 வயதான விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கே.ஆா்.சுதந்திரராசு: மதிப்பிழப்பு செய்யப்பட்டிருந்த விவசாய நிலங்களுக்கு நிபந்தனை பட்டா வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. கீழ்பவானி வாய்க்காலில் ஜனவரியில் புஞ்சை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் தேதியை அறிவிக்க வேண்டும். வாய்க்கால் பகுதிகளில் களைச்செடிகளை அப்புறப்படுத்தி உரிய சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பாசன சபைகளுக்கு உள்பட்ட 46 பாசன சபைகளுக்கும் பல ஆண்டுகளாக தோ்தல் நடத்தப்படாமல் உள்ளது . எனவே, உடனடியாக அதனை நடத்தி பாசன சபை சங்கங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்க விவசாயிகள்: கீழ்பவானி பாசனப் பகுதிகளில் உள்ள சிவகிரி, அறச்சலூா் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் வெட்டும் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

கடம்பூா் மலைப் பகுதி விவசாயிகள்: எங்கள் பகுதியில் விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறும்போது, தடப்பள்ளி வாய்க்காலில் முதல் கட்டமாக 60 மதகுகள் விரைவில் சீரமைக்கப்படும். காலிங்கராயன் பாசனத்துக்கு வரும் மாா்ச் 31 வரை தண்ணீா் திறக்கப்படும். அதன்பிறகு வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெறும். சாயக்கழிவுகளை வெளியேற்றியதாக இந்த ஆண்டில் இதுவரை 55 ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

மாவட்ட ஆட்சியா் பேசும்போது, விவசாயிகள் திரும்பத் திரும்ப கோரிக்கை மனுக்களை அளிக்கும் நிலை ஏற்படதவாறு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com