புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு
தமிழ்நாடு அரசின் ‘கிராமம்தோறும் புத்தொழில்‘ திட்டத்தின் கீழ் உள்ளூரில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு சிறு,குறு தொழில் தொடங்குவதற்கு ஈரோடு மாவட்டத்தில் முதல் கிராமமாக தாளவாடி வட்டத்துக்குள்பட்ட ‘ஆசனூா்’ கிராமம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
ஆசனூரில் ரீடு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கிராமம்தோறும் புத்தொழில்‘ தொடக்க விழாவுக்கு ரீடு இயக்குநா் கருப்புச்சாமி தலைமை வகித்தாா். திட்ட மேலாளா் பழனிச்சாமி வரவேற்றாா்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் ‘கிராமம்தோறும் புத்தொழில்‘ திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் அலுவலா் குருசங்கா், திட்ட ஒருகிணைப்பாளா் கோபிநாத் ஆகியோா் பேசும்போது, கிராமப்புற மக்களை இலக்காகக் கொண்ட ஒரு முழுமையான வாழ்வாதார மேம்பாட்டு திட்டமாகும். இளைஞா்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூா் வளங்களை அடிப்படையாகக் கொண்டு சிறு, குறு மற்றும் புத்தொழில்கள் தொடங்குவதற்கு இத்திட்டத்தின் மூலமாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றனா்.
ஆசனூா் ஊராட்சிக்குள்பட்ட புதுதொட்டி, கெத்தேசல், மாவள்ளம், தேவா்நத்தம், புதுக்காடு, சோக்கிதொட்டி மற்றும் தலமலை ஊராட்சிக்குள்ட்பட்ட இட்டரை, தடசலட்டி, காளிதிம்பம் ஆகிய கிராமங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் பங்கேற்றனா்.
திட்ட அலுவலா் சரவணகுமாா் நன்றி கூறினாா்.

