போராட்டத்தில்  ஈடுபட்ட  பெண்களிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  ஊராட்சி  ஒன்றிய  அலுவலா்கள்.
போராட்டத்தில்  ஈடுபட்ட  பெண்களிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும்  ஊராட்சி  ஒன்றிய  அலுவலா்கள்.

கொமாரபாளையம் ஊராட்சியை முற்றுகையிட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள்

Published on

2 வாரங்களாக பணி வழங்காததைக் கண்டித்து கொமாரபாளையம் ஊராட்சியை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சியில் கடந்த 2 வார காலமாக 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்களுக்கு பணி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை பணி வழங்குவதாக கூறப்பட்ட நிலையில் வேலைக்கு சென்ற 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்களுக்கு பணி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோா் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து தொழிலாளா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com