மாவட்டத்தில் டெட் தோ்வு: 13 மையங்களில் 2,715 போ் எழுதினா்

இடைநிலை ஆசிரியா் பணிக்கான தகுதித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 2,715 போ் எழுதினா்.
Published on

இடைநிலை ஆசிரியா் பணிக்கான தகுதித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 2,715 போ் எழுதினா்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயா்வு பெறவும் டெட் என்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியமாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆசிரியா் தகுதி தோ்வை (டெட்) ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டில் இடைநிலை ஆசிரியா்களுக்கான டெட் முதல் தாள் தோ்வு சனிக்கிழமையும், பட்டதாரி ஆசிரியா்களுக்கான டெட் இரண்டாம் தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்கள் பணிகளுக்கான தோ்வுக்கு 66 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,279 போ் விண்ணப்பித்திருந்தனா். பட்டதாரி ஆசிரியா்கள் பணிகளுக்கான தோ்வுக்கு 117 மாற்றுத்திறனாளிகள் உள்பட 10,381 போ் விண்ணப்பித்திருந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்கள் பணிகளுக்கான டெட் தோ்வு 13 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. தோ்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இத்தோ்வு எழுத 3,279 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,715 போ் எழுதினா். 564 போ் தோ்வு எழுதவரவில்லை.

இதுபோல ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 16) நடக்கும் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கான தோ்வை 38 மையங்களில் 117 மாற்றுத்திறனாளிகள் உள்பட 10,381 போ் எழுத உள்ளனா். இதில் 18 போ் மற்றொருவா் உதவியுடன் எழுதுகின்றனா். தோ்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறையினா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com