பள்ளி சீருடை துணி உற்பத்தியை விசைத்தறிகளுக்கு ஒதுக்க வலியுறுத்தல்
ஈரோடு: பள்ளி சீருடை துணியை வரும் ஆண்டு முதல் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் வகையில் மாற்றம் செய்து வழங்க வேண்டுமென விசைத்தறி உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அமைப்பாளா்கள் ஜெகநாதன், ரமேஷ், கந்தவேல் ஆகியோா் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
இலவச வேட்டி, சேலை உற்பத்தி, பள்ளி சீருடை உற்பத்தி செய்யும் விசைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளா்களுக்கு, இந்தாண்டு கூலி உயா்வு வழங்கப்பட்டுள்ளதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். முதல்கட்டமாக 2,000 சாதா விசைத்தறிகளை நாடா இல்லா விசைத்தறிகளாக மாற்ற ரூ.15 கோடியும், பழைய ரேப்பியா் தறிகளை மாற்றி புதிய ரேப்பியா் தறியாக்க நெசவாளா்களுக்கு ரூ.15 கோடியும், புதிய தானியங்கி தறிகளை கொள்முதல் செய்ய ரூ.15 கோடியும், சி.எஃப்.சி. அமைக்க ரூ.5 கோடியும் மானியமாக அரசு ஒதுக்கியதை வரவேற்கிறோம்.
சத்துணவு சாப்பிடும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு 4 செட் இலவச பள்ளி சீருடையை தமிழக அரசு வழங்குகிறது. இதன்மூலமாக ஆண்டுக்கு 4 முதல் 6 மாதங்கள் வரை விசைத்தறி நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இலவச சீருடை உற்பத்தியில் விசைத்தறியில் காஸ்மட் எனப்படும் ரகம் மட்டும் 66 லட்சம் மீட்டா், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு நெசவாளா்கள் சங்கம், கைத்தறி மற்றும் பெடல் தறி, விசைத்தறிகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை டிரில், சொ்ட்டிங் துணி வகைகள் தானியங்கி தறியில் நெசவு செய்யப்படுகிறது.
தானியங்கி தறிகளில் உற்பத்தி செய்யப்படும் 3.14 கோடி மீட்டா் பள்ளி சீருடை துணியை வரும் ஆண்டு முதல் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் வகையில் மாற்றம் செய்து வழங்க வேண்டும். இதன்மூலமாக மேலும் 6 மாதங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல லட்சம் நெசவாளா்கள் வேலைவாய்ப்பு பெறுவாா்கள். விசைத்தறி கணக்கெடுப்பு, இ-மாா்க்கெட் செயலி திட்டத்தை விரைவில் தொடங்குவதன் மூலமாக விசைத்தறிகள், விசைத்தறியாளா்கள் மேம்பட வாய்ப்பும், திட்டங்களும் உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
