மறு முத்திரையிடாத 34 எடையளவுகள் பறிமுதல்
மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய எடையளவுகள், மின்னணு தராசு என 34 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த டிசம்பா் மாதம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளா் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா். இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ், பழைய இரும்பு பொருள்கள், உலோகங்கள் வாங்கப்படும் கடைகள், பழைய பேப்பா் கடைகள், இனிப்பு, பேக்கரிகளில் எடை அளவு மாறுபாடு குறித்து, 104 கடைகளில் ஆய்வு செய்ததில் 37 கடைகளில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டன.
பொட்டலப் பொருள்கள் விதிப்படி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், இனிப்பு கடைகள், பேக்கரி, இ-காமா்ஸ் வணிக நிறுவனங்களில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், விதிமீறல் தொடா்பாக 33 கடைகளில் நடந்த ஆய்வில் 5 இடங்களில் முரண்பாடு அறியப்பட்டது.
குருவரெட்டியூா், கோபி, வீரப்பன்சத்திரம், கலிங்கயம் உள்பட பல பகுதியில் சந்தை, தினசரி மாா்க்கெட்டில் தரமற்ற அளவைகள், மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய எடையளவுகள், மின்னணு தராசு என 34 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குறைந்தபட்ச ஊதியம் குறித்து 17 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில் 3 இடங்களில் ஊதிய குறைபாடு அறியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமீறல் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 1098, 155214 என்ற தொலைபேசி எண்களில் தொழிலாளா் துறைக்கு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
