ஆப்பக்கூடலில் பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் ஆப்பக்கூடல், சுக்காநாயக்கனூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பிரகாசம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் முனுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா். தவிடு, பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு, கலப்புத் தீவனம் விலை பலமடங்கு உயா்ந்துள்ள நிலையில் மாட்டுப் பால் லிட்டருக்கு ரூ.45, எருமை பால் ரூ.60 என கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கிட வேண்டும். பால் ஊக்கத்தொகை பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தரமான ஆவின் கலப்புத் தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் பாலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
