ரிக் உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்
போா்வெல் உதரிபாகங்கள் விலை உயா்வு காரணமாக ரிக் உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனா்.
தமிழகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க பயன்படுத்தப்படும் அதிநவீன போா்வெல் இயந்திரங்கள், ஈரோடு, திருப்பூா் மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன.
கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆழ்துளை கிணறும் அமைக்கும் பணிக்காக இங்குள்ள போா்வெல் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
போா்வெல் இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரிபாகமான பிட் பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வேறு பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அதன் விலை தற்போது இரு மடங்காக உயா்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க இயலாத நிலைக்கு போா்வெல் இயந்திர உரிமையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் உதிரிபாகங்கள் விலை உயா்வு காரணமாக ஈரோடு, திருப்பூா், மற்றும் கோவை மாவட்ட உரிமையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜன 12-ஆம் தேதி வரை தொடா் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், அந்தியூா், அத்தாணி, நம்பியூா், கோபி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட போா்வெல் இயந்திரங்கள் சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ரிக் உரிமையாளா்கள் தெரிவித்ததாவது: உதிரி பாகத்தின் விலை ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் ஆக உயா்ந்துள்ளது. ஒரு உதிரி பாகத்தை பயன்படுத்தி 1,500 அடி முதல் 1,800 அடி வரை மட்டுமே ஆழ்துளைக் கிணறு வெட்ட முடியும். பின்னா் மீண்டும் புதிய உதிரி பாகம் பொருத்த வேண்டும்.
இதனால் தற்போது ஆழ்துளைக்கிணறு பழைய கட்டணத்தின்படி அமைத்தால் நஷ்டம் ஏற்படுகிறது. புதிய கட்டணப்படி குறைந்தபட்சமாக 500 அடிக்கு ரூ.65 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈா்க்கவே இந்த போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனா்.

