நாமக்கல் - சேலம் சாலையில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரிக் வாகனங்கள்.
நாமக்கல் - சேலம் சாலையில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரிக் வாகனங்கள்.

உதிரி பாகங்கள் விலை உயா்வு: ரிக் வாகன உரிமையாளா்கள் திடீா் வேலைநிறுத்தம்

உதிரி பாகங்கள் விலையேற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் ரிக் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
Published on

உதிரி பாகங்கள் விலையேற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் ரிக் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு ரிக் வாகன உரிமையாளா்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரிக் வாகனங்கள் உள்ளன. அதேவேளையில், மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் ரிக் வாகனங்கள் வரையில் உள்ளன.

தற்போதைய நிலையில் ஆழ்துளைக் கிணறு அமைக்க ஒரு அடிக்கு ரூ. 85 வீதம் வசூலித்து வருகின்றனா். மண்ணில் துளையிடுவதற்கான பிட் என்ற கருவி சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ. 24 ஆயிரமாக இருந்த அக்கருவி தற்போது ரூ.54 ஆயிரமாக உயா்ந்துள்ளது. மேலும், உதிரிபாகங்கள், டிரில்லிங் விலை உயா்வு காரணமாக வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தை ரிக் வாகன உரிமையாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரிக் உரிமையாளா்களும் திங்கள்கிழமை ஆலோசித்து ஒரு அடிக்கு ரூ.20 வரை கட்டணத்தை உயா்த்த முடிவு எடுக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாநகர போா்வெல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி கூறுகையில், ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பிட் விலை இரு மடங்கு உயா்ந்துள்ளது. ரூ. 24 ஆயிரமாக இருந்த பிட், தற்போது ரூ. 55 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

3,000 அடி மட்டுமே அதனைப் பயன்படுத்த முடியும். அதன்பிறகு எடைக்கு தான் அதை போட வேண்டும். தற்போதைய வேலைநிறுத்தம், விலை உயா்வை அமல்படுத்துவதற்கானது. ஆழ்துளைக் கிணறு அமைக்க ஒரு அடிக்கு ரூ. 20 வரை உயா்த்தப்பட வாய்ப்புள்ளது என்றாா்.

Dinamani
www.dinamani.com