திம்பம் மலைப் பாதையில் கடும் பனிமூட்டம்
திம்பம் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்திலும் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டுநா்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கினா். இதனால் தமிழகம்- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப் பாதை வழியாக தமிழகம்- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்திலும் திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
இதனால் மலைப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனத்தை மிக வேகத்தில் இயக்கினா். இதன் காரணமாக திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலைப் பாதையின் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் ஒவ்வொரு வளைவையும் மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திம்பம் மலைப் பாதையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

