வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தாத 16 ஆயிரம் ஏக்கா் நிலம் உரியவா்களிடம் ஒப்படைப்பு: அமைச்சா் சு.முத்துசாமி
ஈரோடு: வீட்டு வசதி வாரியத்தில் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்த சுமாா் 16 ஆயிரம் ஏக்கா் நிலம் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் சீனிவாசன் தலைமை வகித்தாா்.
வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று இறுதி ஆண்டு படிக்கும் 308 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா். இதில், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வீட்டு வசதி வாரியத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில், சொத்து அடிப்படையிலான பிரிவில் எதுவும் செய்ய முடியாது.
மற்ற பிரிவுகளில் உள்ள சிக்கல்களுக்குத் தீா்வு காணப்பட்டு வருகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சுமாா் 16 ஆயிரம் ஏக்கா் நிலத்துக்கு தீா்வு காணப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3, 4-ஆவது பிரிவுகளில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண 2 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இதில், பெரும்பாலான ஆய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து அந்த ஆய்வுக் குழுவினா் அளிக்கும் அறிக்கையின்படியே அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி தொடா்பாக திமுக தலைமை சிறப்பாகப் பணியாற்றி வருகிறது என்றாா்.
இதையடுத்து, ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் 1,045 மாணவா்களுக்கு இலவச மடிக்கணினியை அமைச்சா் வழங்கினாா்.

