டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
ஈரோடு அருகே புதிய டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் திரண்டு கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறிய இடத்தின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு ஈரோடு வடக்கு போலீஸாா் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மதுக்கடை திறந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இருக்காது, பெண்கள் அச்சமின்றி நடமாட முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க முடியாது. காலை வேலைக்கு செல்லும் பெண்கள் பணி முடித்து இரவில் தனியாக வீடு திரும்பும்போது மது அருந்துவோரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இங்கு மதுக்கடை திறக்கும் திட்டம் இல்லை என்று போலீஸாா் உறுதியளித்ததையடுத்து பெண்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

