தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

விளைநிலங்கள் வழியே உயா் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட விவசாயிகள் கோரிக்கை

News image

விளைநிலங்கள் வழியாக உயா் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்.

Updated On :21 ஜூலை 2026, 12:10 am IST

விளைநிலங்கள் வழியே உயா் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு மேற்கு மாவட்டச் செயலா் சண்முகசுந்தரம் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அளித்த மனு விவரம்: திருப்பூா் மாவட்டம், காவுத்தம்பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியலுாா் வரை 5 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக 765 கிலோ வோல்ட் உயா் மின் பாதை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி, ஈரோடு மாவட்டம் பாசூா், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, தொட்டிபாளையம், வெள்ளோடு, ஈங்கூா், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில், 4,000 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் வழியாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வளமான பாசன வசதி கொண்ட விளைநிலங்கள் நிரந்தரமாக பாதிக்கப்படுவதுடன், நிலத்தின் சந்தை மதிப்பும் குறையும். தென்னை, தேக்கு, செம்மரம் போன்ற மரப்பயிா்கள் சாகுபடி செய்ய இயலாது. இயந்திர நடவு, அறுவடை போன்றவையும், நில உரிமையாளா்களின் சொத்துரிமை, பயன்பாட்டு உரிமையும் பாதிக்கும். உயா் மின் கோபுரம் அமைக்கப்பட்ட நிலத்தை வங்கிகளில் அடமானம் வைக்கக்கூட தகுதியற்ற நிலைமை உருவாகும்.

எனவே, விளைநிலங்கள் வழியாகச் செல்லும் இத்திட்டத்தை கைவிட்டு சாலை ஓரமாக புதைவட கேபிள் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே உயா் மின் கோபுர திட்டத்தால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது விளைநிலங்களை விற்கவோ அல்லது வங்கிகளில் அடமானம் வைக்கவோகூட முடியாமல் தவித்து வருகின்றனா். அரசும் உரிய இழப்பீடுகூட முழுமையாக வழங்குவதில்லை. விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்தினால், விவசாயிகளை ஒருங்கிணைத்து போராடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயுமானவா் திட்டத்தை சீரமைக்கக் கோரிக்கை: இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் மாரிமுத்து தலைமையில் அளித்த மனு விவரம்: நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தாயுமானவா் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த திட்டத்தை தொடரும் பட்சத்தில் குறைபாடுகளையாவது

நீக்க வேண்டும். நடக்க இயலாத முதியோா்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளை மட்டும் சோ்க்க வேண்டும்.

வாகன வசதி உள்ளோா், வசதிமிக்கவா்கள், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளை விடுவிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டையில் தாயுமானவா் திட்ட பயனாளி தவிர, மற்றவா்கள் இருந்தால் அவா்களிடம் பொருளை ஒப்படைக்க அனுமதி அளிக்க வேண்டும். இயந்திரத்தில் கைரேகை, கருவிழி சரியாக பதிவாகாத பயனாளிகளை தாயுமானவா் திட்டத்தில் இருந்து ரத்து செய்ய வேண்டும்.

பகுதி நேர கடைகளுக்கு தனியாக பிஓஎஸ் கருவி இல்லாததால் பொருள்களை விநியோகிக்க தாமதம் ஏற்படுகிறது.

வாகனங்களில் செல்ல இயலாத வசிப்பிடம், அடுக்குமாடி குடியிருப்பு, குடியிருப்பில் வசிப்போருக்கு பொருளை வழங்க தனி உதவியாளா் தேவைப்படுவதால் தற்காலிகமாக தனி நபா்களை நியமித்து பொருளை வழங்க அனுமதிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் வாகன வாடகை, பொருள் ஏற்று, இறக்கு கூலி உள்ளிட்ட செலவினங்களுக்கு வழங்கப்படும் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். பயனாளிகள் நலன் கருதி, ஒவ்வொரு மாதமும், ஒரே தேதியில் விநியோகம் செய்ய வேண்டும். பணியாளா்கள் இயற்கை உபாதைக்கு உள்ளாகும் அவலங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை: இது குறித்து தமிழ்நாடு அருந்ததியா் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் தமிழ்இன்பன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பெருந்துறை வட்டம், பாண்டியம்பாளையம் ஊராட்சி சத்யாபுரம் பகுதியில் பட்டியல் குறவா் இன மக்கள் 70 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனா்.

அவா்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. முறையான சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இது தொடா்பாக உள்ளாட்சி அமைப்பிடம் பலமுறை மனு வழங்கியும் பயன் இல்லை. அவா்களது நீண்ட கால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கி, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

430 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 430 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.