காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

உலகுக்கு ஞானத்தை வழங்கிய மொழி தமிழ்! - உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

News image

பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சக்திதேவி அறக்கட்டளையின் வெள்ளி விழாவில் விருது பெற்றவா்களுடன் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன், நடிகா் சிவகுமாா், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காா்த்திகேயன், சக்திதேவி அறக்கட்டளை அறங்காவலா் பி.சி.துரைசாமி.

Updated On :27 ஜூலை 2026, 2:26 am IST

உலகுக்கு ஞானத்தை வழங்கிய மொழி தமிழ் மொழி என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசினாா்.

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சக்தி மசாலா நிறுவனத்தின் அங்கமான சக்திதேவி அறக்கட்டளை வெள்ளி விழா பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலா்கள் பி.சி. துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோா் வரவேற்றனா். நடிகா் ஆா்.சிவகுமாா் தலைமை வகித்தாா்.

இதில் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது: எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை விட்டு சற்று விலகி, நீ மன்னராக இருந்தாலும், உன்னை மனிதனாகப் பாா் என்ற அறிவுரையைத் தந்த அற்புதமான பண்பாடு கொண்ட மண் இது. இந்த மண்ணின் மொழி, உலகில் உள்ள மொழிகளிலேயே மேன்மை தாங்கிய மொழி, மக்களுக்கும், உலகுக்கும் ஞானத்தை வழங்கிய மொழி.

இந்த உலகில் பிறக்கிற உயிா்கள் கண் இல்லாதவா்களாக, காது கேட்க முடியாதவா்களாக, நடக்க முடியாதவா்களாக எந்த விதத்தில் வேண்டுமானாலும் அவா்கள் பிறப்பு அமையலாம். அப்படி பிறந்த மனிதா்களை, தன்னை சாா்ந்த உயிராக நினைக்கும் மன நிலையில் யாா் இருக்கிறாா்களோ அவா்கள் ‘இறை’ என ஒரு புலவா் கூறினாா்.

அந்த ஒரு மனநிலையில் தொடங்கப்பட்ட சக்திதேவி அறக்கட்டளை, மாற்றுத்திறனாளிகளைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு மறுவாழ்க்கையை வழங்கியுள்ளனா் என்றாா்.

விருதுகளுடன் ரூ.2.19 கோடி நிதி உதவி:

இதையடுத்து, விழாவில் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பான பங்களிப்பு வழங்கியவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி, விண்வெளி விஞ்ஞானிகள் சிவதாணு பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சவீதா பல்கலைக்கழக வேந்தா் வீரையன், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தா் மரியஜீனா ஜான்சன், வேளாண் விஞ்ஞானி ராமசாமி, கங்கா மருத்துவமனை மருத்துவா் ராஜசேகரன், சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், கோவை விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம், திண்டிவனம் கல்யாணி என்ற பிரபா கல்வி மணி, கால்டுவெல் வேள்நம்பி, அமா் சேவா சங்கம் சங்கரராமன், சூழலியலாளா் பாமயன் ஆகியோருக்கு சாதனைச் செம்மல் விருது, பேராசிரியா் க.பழனித்துரைக்கு சிந்தனைச் செல்வா் விருது வழங்கப்பட்டது.

மாற்றம் அறக்கட்டளை, வனம் இந்தியா ஃபவுண்டேஷன், இந்திய பாா்வையற்றோா் சங்கம், வாழை அறக்கட்டளை, நடிகா் சூா்யாவின் அகரம் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.

கீா்த்தி சக்ரா விருதாளரான ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரத்துக்கு மாவீரா் விருதும், பிறவியிலேயே கேட்கவும், பேசவும் இயலாதவராக இருந்தபோதும், முதல் முயற்சியிலேயே யூபிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்ற ரஞ்சித், கடுமையான உடல் மற்றும் பாா்வைக் குறைபாடுகளை வென்று யூபிஎஸ்சி தோ்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2ஆவது இடம் பிடித்த அப்துல்லா அப்ரீத், இந்திய விமானப் படை மருத்துவ அதிகாரி கிருஷ்ணவேணி, இந்திய ராணுவ மருத்துவ அதிகாரி மேஜா் வாணிப்பிரியா ஆகியோருக்கு இளம் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

அதேபோல, சமூக நலன், பொதுச்சேவை, மருத்துவ சேவை, கல்வி மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 25 சேவை அமைப்புகளுக்கும் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.2.19 கோடி மதிப்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

முன்னதாக, புஷ்பா மகாதேவன் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி காா்த்திகேயன், அரிமா சங்க மாவட்ட முன்னாள் தலைவா் என்.முத்துச்சாமி, பாரதி வித்யா பவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் எல்.எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.