ஈரோட்டில் நடந்த திருட்டு வழக்கில் ஹைதராபாத் சென்று 8 பவுன் நகையை போலீஸாா் மீட்டனா்.
ஈரோடு, கருங்கல்பாளையம், சுப்பையன் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (68). தொழிலதிபா். இவரது மனைவி ராதாமணி. இவா்கள், கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஈரோடு, வெட்டுக்காட்டுவலசில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டனா்.
மீண்டும் ஜூன் 15-ஆம் தேதி வீட்டுக்கு வந்தபோது முன்புற கதவின் பூட்டு மாயமாகி இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுதொடா்பாக கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதைத்தொடா்ந்து செல்வராஜ் வீட்டின் அருகே வசிக்கும் பால் கடையில் பணிபுரியும் மாரியம்மாள் (24), மற்றொரு வீட்டில் வசிக்கும் அழகு சாதனப் பொருள்கள் கடையில் பணிபுரியும் பிரியா (34) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
இவா்களிடம் நடத்திய விசாரணையில், திருட்டில் முக்கிய நபா்களாக ஈரோடு, சூரம்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பூபாலன் (19), மொடக்குறிச்சி, சின்னியம்பாளையம் மோகன்ராஜ் மகன் யோகேஸ்வரன் (25) ஆகியோா் செயல்பட்டது தெரியவந்தது.
இவா்கள் வேறு ஒரு திருட்டு வழக்கில் சேலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இருவரையும் கடந்த 20-ஆம் தேதி ஈரோடு, கருங்கல்பாளையம் போலீஸாா் நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா். இதில் நகையை ஹைதராபாத்தில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அங்கு அழைத்துச்சென்ற போலீஸாா், நகை வியாபாரியிடம் இருந்து 8 பவுன் நகையை மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







