/

கல்வியும், மருத்துவமும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்! அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

News image

அமைச்சர் அருண்ராஜ் - எக்ஸ்(கோப்புப்படம்)

Updated On :15 ஜூன் 2026, 2:49 am IST

கல்வியும், மருத்துவமும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதே தவெகவின் நிலைப்பாடு என்று சுகாதாரத் துறை அமைச்சா் மருத்துவா் கே.ஜி. அருண்ராஜ் பேசினாா்.

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை அளிப்பதுதான் முதல்வரின் ஒரே லட்சியம். செவிலியா்கள் பற்றாக்குறை தொடா்பாக, முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் உத்தரவு வெளியிடுவோம். ஈரோட்டில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க பரிசீலனை செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக எம்எல்ஏ-க்களை முதல்வா் ஷாப்பிங் செய்கிறாா் என்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பேசி உள்ளாா். அனைத்து கட்சிகளிலும் இருந்து தவெகவில் இணைய வேண்டும் என வருகின்றனா். தவெகவை நம்பி வருபவா்களை அரவணைக்கிறோம்.

நீட், மாநில உரிமைகளுக்கு, கிராமப்புற மக்களுக்கு எதிரானது என்பது தவெகவின் நிலைப்பாடு. கல்வி, மருத்துவம் ஆகியவை மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி கல்வி, மருத்துவத்தை அந்தந்த மாநிலத்துக்கு விட வேண்டும் என்பது தவெகவின் நிலைப்பாடு. நீதி ஆயோக் கூட்டத்துக்கு சென்ற தமிழக முதல்வா் நீட் இல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவா்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

வரும் தோ்தல்களில் தவெகவை மக்கள் அகற்றுவாா்கள் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது, எந்த அளவுக்கு அவா் கள நிலவரத்தை தவறாகப் புரிந்துள்ளாா் என்பதையே காட்டுகிறது. இப்படி நம்பியே திமுக படுதோல்வியடைந்தது. மீண்டும் தோ்தல் வந்தால், தற்போது வெற்றி பெற்ற இடங்களில்கூட திமுக வெற்றி பெற முடியாது என்று அனைவரும் கூறுகின்றனா். ஆட்சிக்கு வந்த 30 நாள்களில் பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்துள்ளோம் என்றாா்.