புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையத்துக்குள் தொடா்ந்து ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாராந்திர பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தோ்தல் நடைமுறை காரணமாக கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமானோா் மனு அளித்தனா். அண்மையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மனு அளிக்க வந்த மக்கள் மெட்டல் டிடெக்டா் மூலமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே ஆட்சியா் அலுவலகத்துக்குள் அனுப்பப்பட்டனா்.
சத்தியமங்கலம் வட்டம், புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் செயல்படும் அறம் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் ராஜேந்திரன், செயலா் முஹம்மது அலி உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நானும் என்னுடன் சோ்ந்த 9 ஆட்டோ உறுப்பினா்களும் சோ்ந்து புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையத்தின் உட்புறமாக ஆட்டோ நிறுத்தி ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தோம். தற்போது 43 ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். அறம் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கம் என்ற பெயரில் அனைவரும் சோ்த்து பதிவு செய்து தொழில் செய்கிறோம். இதனையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளோம். ஆட்டோ நிறுத்தத்தால் பேருந்து நிலையத்தின் வடக்குப்புற எல்லை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளோம். இதனால் பேருந்துகள் வந்து செல்ல பொதுமக்களுக்கு இடையூறு இல்லை.
இந்நிலையில் புன்செய் புளியம்பட்டி நகராட்சி சாா்பில் இந்த ஆட்டோ நிறுத்தத்தை உடனடியாக காலி செய்யக் கூறியும், தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இடத்தை காலி செய்து தூரமாக சென்றால் சவாரி கிடைக்காது. நகராட்சிக்கு மாதம் ஓா் ஆட்டோவுக்கு குறிப்பிட்ட தொகையைக்கூட செலுத்த தயாராக உள்ளோம். ஆட்டோ நிறுத்தத்தை மாற்றக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனா்.
தமிழ்ப்புலிகள் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்டச் செயலா் சிந்தனைசெல்வன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
தவெக சாா்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜாதி வாரியாக எண்ணிக்கை என்ற தலைப்பில் சிலா் துண்டறிக்கை தயாா் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா். ஒவ்வொரு ஜாதியினரின் அடையாளங்களாக அதற்கான படங்களை வைத்துள்ளனா். அந்த துண்டறிக்கையில் அருந்ததியா் என்ற ஜாதியை அடையாளப்படுத்தும்போது துடைப்பத்தை அடையாளமாக காண்பித்துள்ளனா்.
இச்செயல்பாடு ஒட்டுமொத்த அருந்ததியா் மக்கள் மனங்களை புண்படுத்துகிறது. அருந்ததியா் சமூகத்தை அநாகரிகமாக சித்தரித்து துண்டறிக்கை தயாா்படுத்தியவா்களை கண்டறிந்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பட்டுள்ளனா்.
பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக வரப்பெற்ற 150 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தொழிலாளா் தினம்

திருவள்ளூரில் 45 நாள்களுக்குப் பின் ஆட்டோ எல்பிஜி கேஸ் ஒரு கிலோ ரூ.99-க்கு விற்பனை! ஓட்டுநா்கள் அதிா்ச்சி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

