தீபாவளிப் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஈரோட்டில் நள்ளிரவு வரை களைகட்டிய இறுதிநாள் வியாபாரம்
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஈரோட்டில் எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம் இருந்ததால் சனிக்கிழமை நள்ளிரவு வரை வியாபாரம் களைகட்டியது.

ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் புத்தாடைகள் வாங்க திரண்ட பொதுமக்கள்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஈரோட்டில் எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம் இருந்ததால் சனிக்கிழமை நள்ளிரவு வரை வியாபாரம் களைகட்டியது.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜவுளிகள் எடுக்காத பொதுமக்கள் ஈரோடு கடை வீதியில் சனிக்கிழமை திரண்டனா். எங்கு பாா்த்தாலும் சாலை தெரியாத அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் காலை முதல் மாலை வரை இருந்த கூட்டத்தைவிட இரவு 7 மணிக்கு மேல் ஈரோடு கடை வீதி, ஆா்கேவி சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
சாலையோர கடைகளில் குறைந்த விலையில் சட்டை, சேலை, குழந்தைகளுக்கான துணிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கான அழகுசாதனப் பொருள்கள், வாட்ச், பெல்ட், காலணி என பல்வேறு கடைகள் இருந்தன. பட்டாசு, இனிப்புக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களிலும், காா் போன்ற வாகனங்களில் மக்கள் வந்ததால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்டம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
போக்குவரத்துக்கு தடை
ஈரோடு மாநகா் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சனிக்கிழமை காலை முதலே பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் இருந்து நேதாஜி சாலையிலும், காவேரி சாலையில் இருந்து (கிருஷ்ணா திரையரங்கு சந்திப்பு) ஆா்கேவி சாலையிலும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் தடை விதித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
போலீஸாா் பாதுகாப்பு
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு, நகை பறிப்பு ஆகிய குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனா். போலீஸாா், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த ஆண், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். போலீஸாா் சாதாரண உடையணிந்து மக்களோடு, மக்களாக கலந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம், பைனாகுலா் மூலமாக கண்காணித்தபடி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

