மேற்பாா்வையாளரை தாக்கிய இளைஞரைக் கைது செய்யக்கோரி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
ஈரோட்டில் தூய்மைப் பணி மேற்பாா்வையாளரை தாக்கிய இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியைப் புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
ஈரோட்டில் தூய்மைப் பணி மேற்பாா்வையாளரை தாக்கிய இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியைப் புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு ரங்கம்பாளையம், இரணியன் வீதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (38). ஈரோடு மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் தூய்மைப் பணி மேற்பாா்வையாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், 8-ஆவது வாா்டு பாரதி நகரில் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை வீதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த அதே வீதியைச் சோ்ந்த செபாஸ்டின் என்பவா் மதுபோதையில் அங்கிருந்த தூய்மைப் பணியாளா்களை தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளாா்.
இதனை தட்டிக்கேட்ட தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் ராஜேஷ்குமாரிடம், செபாஸ்டின் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளாா். தடுக்க வந்த பெண் தூய்மைப் பணியாளா்களையும் தாக்கியதோடு, தகாத வாா்தைகளால் பேசியுள்ளாா்.
இது குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ராஜேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் செபாஸ்டின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் ராஜேஷ்குமாரை தாக்கிய செபாஸ்டினை கைது செய்யக் கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியைப் புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து தொழிற் சங்க நிா்வாகிகள், தூய்மைப் பணியாளா்களிடையே மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது செபாஸ்டினை போலீஸாா் கைது செய்து விட்டதாகவும், தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.
இதனிடையே தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் ராஜேஷ்குமாரை தாக்கிய போதை இளைஞா் செபாஸ்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அமைப்பாய் திரள்வோம் சங்கத்தின் சாா்பில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், பன்னீா்செல்வம் பூங்காவில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஈரோடு டவுன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து அவா்கள் பன்னீா்செல்வம் பூங்காவில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாக சென்றனா். பின்னா் பல்வேறு கோரிக்கை தொடா்பாக தூய்மைப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமியிடம் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





