
விவசாய நிலங்களில் வண்டல் மண் எடுப்பதை தவிா்க்க வேண்டும்
பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் மாயாற்றின் தெற்கு கரையில் பாரம்பரியமாக குறுகிய கால பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலங்களில் வண்டல் மண் எடுக்காமல் வேறு பகுதியில் எடுக்குமாறு அணைப் பகுதி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

வண்டல் மண் அள்ளுவதற்காக மாயாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மண் பாலம் . ~சாம்பாா் பூசணி சாகுபடி செய்த நிலத்தில் வண்டல் மண் அள்ளுவதாக குற்றஞ்சாட்டி அறுவடைக்குத் தயாராக இருக்கும் பூசணியுடன் குறு விவசாயிகள்.
பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் மாயாற்றின் தெற்கு கரையில் பாரம்பரியமாக குறுகிய கால பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலங்களில் வண்டல் மண் எடுக்காமல் வேறு பகுதியில் எடுக்குமாறு அணைப் பகுதி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானிசாகா் அணை நீா்த்தேக்க பகுதியான மாயாற்றின் தெற்கு கரையில் வெள்ளை மொக்கை முதல் பூதி குப்பம் வரை அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அணை நீா்த்தேக்கத்தில் சாம்பாா் பூசணி உள்ளிட்ட குறுகிய கால காய்கறி பயிா்களை தற்போது சாகுபடி செய்துள்ளனா்.
இதற்கிடையே மாயாற்றின் தெற்கு கரை பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்காக தற்போது வண்டல் மண் எடுக்கும் லாரி உரிமையாளா்கள் தரப்பினா் மாயாற்றை தடுத்து சிமென்ட் குழாய்களை பயன்படுத்தி தரைப் பாலம் அமைத்து வண்டல் மண் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், தெற்கு நீா்த்தேக்கப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருக்கும் சாம்பாா் பூசணி நிலங்களில் வண்டல் எடுக்க லாரி உரிமையாளா்கள் தயாராகி வருகின்றனா்.
3 மாதங்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்து சாகுபடி செய்த பயிா்களை அழித்து வண்டல் மண் எடுப்பதை முதல்வா் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்துவிரிந்து கிடக்கும் மேற்கு பகுதியில் வண்டல் எடுக்க அரசு லாரி உரிமையாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
1961-ஆம் ஆண்டு முதல் பவானிசாகா் அணை நீா்த்தேக்க பகுதியில் நீா் குறைந்த காலங்களில் குறுகிய கால பயிா்களான காய்கறிகளை சாகுபடி செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். பவானிசாகா் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை தொடா்ச்சியாக இருந்து வந்த நிலையில், ஒருமுறை கூட நாங்கள் விவசாயம் செய்யும் நிலத்திலிருந்து வண்டல் மண் எடுக்கப்படவில்லை.
ஆனால், இந்த ஆண்டு நாங்கள் விவசாயம் செய்யும் நிலத்திலிருந்து வண்டல் மண் எடுக்க திட்டமிட்டுள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





