கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு நிகழ்வு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உதகையில் உள்ள ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உதகையில் உள்ள ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிறித்துமஸ் பண்டிகை என்றாலே கேக்தான் பிரதானமாகும். ஐரோப்பியர்களின் பாரம்பரிய வழக்கப்படி  கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக கேக் தயாரிக்கும் பணியைத் தொடங்கிவிடுவர். அதன்படி,  21ஆவது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹோட்டலின் இருப்பிட இயக்குநர் இஸ்மாயில் கான்,  உணவு மேலாளர் பிரதீப்குமார், தலைமை சமையல் கலைஞர் சுரேந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அந்த ஹோட்டலின் முக்கிய வாடிக்கையாளர்கள்,  சிறப்பு அழைப்பாளர்கள், ஹோட்டலில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து உணவு மேலாளர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் 60 கிலோ எடையிலான முந்திரி, உலர் திராட்சை, அத்திப் பழம்,  பேரீச்சம் பழம்,  பாதாம்,  பிஸ்தா உள்ளிட்ட 30 வகை பருப்புகளுடன்,  7 வகையான மது,  அன்னாசிப்பூ,  இலவங்கம்,  ஜாதிக்காய்  உள்ளிட்ட மருத்துவ மூலிகைகளும் சேர்த்து கலக்கப்பட்டு,  மூடிவைக்கப்பட்ட மரக்குடுவையில் 30 நாள்களுக்கு இருட்டறையில் வைக்கப்படும். இதை அவ்வப்போது திறந்து கிளறியும் வைக்க வேண்டும்.
30 நாள்களுக்குப் பின்னர் இந்தக் கலவையுடன் மைதா,  முட்டை, நெய்,  தேன் உள்ளிட்டவற்றை சேர்த்து கேக் தயாரிக்கப்படும். அப்போது 120 கிலோ எடையிலான கேக் கிடைக்கும். இது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் விருந்தினர்களுக்கு விநியோகிக்கப்படும்.
ஐரோப்பியர்கள் தொடக்க காலத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும்போது மது வகைகளை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தினர். ஆனால், அவர்கள் இந்தியாவுக்குள் வந்த பின்னர்தான் இந்திய மசாலாப் பொருள்களையும் சேர்த்து கேக் தயாரிக்க ஆரம்பித்தனர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கேக் வகைகளே பிரதான இடத்தில்  உள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com