கொடநாடு ஓட்டுநர் சாவு விவகாரம்: விபத்தை ஏற்படுத்திய தம்மம்பட்டி ஓட்டுநரிடம் தனிப்படை தீவிர விசாரணை

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியான வழக்கு தொடர்பாக அவருடைய இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய, தம்மம்பட்டி கார் ஓட்டுநரை பிடித்து,
தம்மம்பட்டி ஓட்டுநர் ரபீக்.
தம்மம்பட்டி ஓட்டுநர் ரபீக்.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியான வழக்கு தொடர்பாக அவருடைய இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய, தம்மம்பட்டி கார் ஓட்டுநரை பிடித்து, சேலம் எஸ்.பி.யின் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அங்கு இரவு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே அந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கனகராஜ் மீது கார் மோதியதில், அவர் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தடயங்களை அழித்ததாக விபத்தில் பலியான கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினரான ஆத்தூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்து தொடர்பான வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் தலைமையில் தனிப்படை போலீசார், இந்த வழக்கின் ஆரம்ப நிலையில் இருந்தே தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கனகராஜின் இருசக்கர வாகனம் மீது மோதிய காரில் வந்தவர்களான பெரம்பலூரைச் சேர்ந்த நல்லதம்பி குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநரான தம்மம்பட்டியைச் சேர்ந்த ரபீக் (வயது 23) என்பவரை, சனிக்கிழமை மாலை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீ அபினவ் நேரடியாக இறங்கி உள்ளார். தம்மம்பட்டி ரபீக்கிடம் இந்த விபத்து சம்பவம் நடந்தது எப்படி?, என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் விசாரித்து பதிவு செய்து வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பிறகு அவர் பயன்படுத்திய பழைய கைப்பேசி எண்ணை, ரபீக் மாற்றியதற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய பழைய கைப்பேசி எண் மற்றும் புதிய எண்ணை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

இதில் அந்த கைப்பேசி எண்களுக்கு பேசியவர்களின் விவரங்களையும் மற்றும் விபத்து நடந்த மாதத்தில் அவர் யார், யாரிடம் பேசி உள்ளார், அவரிடம் பேசியவர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com