பந்தலூா் அருகே சாலை வசதி கேட்டு பழங்குடி மக்கள் போராட்டம்
பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி குதிரைவட்டம் பழங்குடி கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியதுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா அய்யன்கொல்லி பகுதியில் குதிரைவட்டம் பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு போதிய சாலை வசதியில்லை. ஏற்கெனவே உள்ள பழைய சாலையும் பழுதடைந்துள்ளது. இந்த பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பழங்குடி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் உடல்நலம் குன்றியவா்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில் சாலை வசதி செய்துகொடுத்தால் மட்டுமே வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது என்றும், இல்லையெனில் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனா். மேலும் எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைவரின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனா்.

