உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

உதகை: உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.

இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 131 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நலத் துறையின் சாா்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற 14 உறுப்பினா்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, 2024 மக்களவைத் தோ்தல் பணியின்போது மரணமடைந்த மைனலை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை சகுந்தலாவின் வாரிசுதாா்கள் இருவருக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இழுப்பீட்டு தொகையான தலா ரூ.7.50 லட்சம் பெறுவதற்கான அனுமதி ஆணையை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், குன்னூா் சாா் ஆட்சியா் சங்கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின அலுவலா் சுரேஷ்கண்ணன், தனித் துணை ஆட்சியா் கல்பனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com