கூடலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை ரூ.38 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கால்வாய் பணியை ஆய்வு செய்தாா். மேலும், தோட்டமூலா பகுதியில் தேசிய நகா்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ் ரூ.1.20 கோடி மதிப்பில் சுகாதார நிலைய கட்டுமானப் பணி, கோக்கால் பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, மாக்கமூலா பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.3.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளையும், ஏற்கெனவே முடிவுற்ற ரூ.70 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, நந்தட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடியை ஆய்வு செய்த ஆட்சியா் குழந்தைகளின் எடையை சரிபாா்த்தாா். பின்னா் சமையலறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் சுவேதாஸ்ரீ, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நகராட்சிப் பொறியாளா் சாந்தி, பணி மேற்பாா்வையாளா் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.